பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

தும்பைப் பூ

தந்தை கூப்பிடுங் குரலுக்கு ஏனென்று கேட்டு நடக்கப் பக்கத்திலேயே இருந்தான். சிற்றன்னையுடன் இருந்து தாய்க்குச் செய்ய வேண்டிய சிச்ரூஷைகளைச் செய்வதில் உதவியாய் இருந்தான்.

திலகவதிக்குப் பேச்சு மூச்செல்லாம் மெல்ல மெல்ல அடங்கி வந்தது. ஆனால், அவள் கண்கள் மட்டும் அடிக்கடி எல்லோரையும் ஆவலாகப் பார்க்கலாயின. இரவு பகலாய்க் கண் விழித்தும் கவலை கொண்டும் கணவன் உருக்குலைந்து போயிருப்பதைக் கண்டு அவள் உள்ளம் உருகியது. அடுத்தபடி, எல்லாப் பாரங்களையும் தான் தாங்கிக் கொண்டு அக்கா எப்படியும் பிழைத்தெழுந்து விடவேண்டும் என்ற ஆவலோடும், நம்பிக்கையோடும் வேளா வேளைக்கு மருந்தும், உணவும் கொடுத்து கண்ணுங் கருத்துமாகக் காத்து ஓய்ச்சல் ஒழிவின்றி உழைத்து ஓடாய்ப் போய் விட்டிருக்கும் மங்கையைப் பார்த்து அவள் கண்ணிர் உகுத்தாள்.

விவரம் நன்றாக அறியாவிட்டாலும் தான் அசெளக்கியமாயிருப்பதற்காக வருந்தி மெலிந்து போன கணேசனையும், கோகிலத்தையும் கட்டிக் கொண்டு அவள் கோவென அழுதாள்.

விசுவநாதனேஇ அவள் அன்பாகத் தடவிக் கொடுத்து, “அப்பாவுக்கு ஒத்தாசையாயிரு, விசு! அண்ணனைப் போல் அக்கரையற்றிராதே” என்று அறிவுரை கூறினாள்.

சிவகுமாரனுக்கும் ஏதாயினும் சொல்லிவிட்டுப் போக வேண்டும் என்று அவளுடைய உள்ளந் துடித்தது. அவன் அவள் அருகே வருவதே அருமை. தார இருந்தே துயரத்தை வெளிப்படுத்தி விட்டுப் போய் விடுவான். ஒரு கணமாயினும் தன் சமீபம் அவன் இருக்கவேண்டுமென்று ஆசைப்பட்டது திலகவதியின் நைந்த உள்ளம். அதற்கு அவன் சந்தர்ப்பம் அளிக்கவில்லை.

இரண்டு மூன்று நாட்களாகவே, திலகவதி அடிக்கடி உணர்விழப்பதும் மெல்ல உணர்வு பெறுவதுமாயிருந்தாள்.