பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தும்பைப் பூ

141

கும் விசுவநாதனுக்கும் புத்தி சொல்லித் திருத்த முயல்வதை யறிந்து அவள் நெஞ்சம் நன்றியுனர்வால் நெகிழ்ந்தது.

இவ்விதம் திலகவதி பலவித நினைவுகளால் சதா அலைக்கப்படுவதை அவள் சரீரம் தாங்கவில்லை. அது மிகவும் சோர்ந்து போய் விட்டது. ஒருநாள் திடீரென உடல் நிலை மிக மோசமாய் விட்டது. பொங்கலுக்கு முன்னாள் இரவு அவள் நிலை கவலைக்கிடமாய் விட்டது. ஊர் முழுவதும் மக்கள் பீடை மாதங் கழித்துப் புத்தாண்டு பிறந்து வாழ்க்கை மகிழ்ச்சி பொங்கப் போகிறது. வீடுகளில் பால் பொங்க வைக்கப் போகிறோம் என்று பூரிப்புக் கொண்டு, போகிப் பண்டிகையில் பழசுகளையெல்லாம் திக்கிரையாக்கி மேளமடித்து எண்ணெய் தேய்த்து முழுகிக் கோடியாடை உடுத்திக் குதூகலமாயிருக்கும் சமயத்தில், சதானந்தம் பிள்ளை வீடு துக்கமும் அழுகையுமாய் இருந்தது. திலகவதியின் படுக்கையைச் சுற்றி எல்லோரும் கவலையோடும் கண்ணிரோடும் கை பிசைந்து கொண்டு நின்றிருந்தனர்.

தனக்கு ஆயுள் குறுகி விட்டது; இனி தன் உயிர் உடல் கூட்டிலிருந்து எந்தக் கணத்திலும் பிரிந்துவிடக் கூடும் என்று நன்கு அறிந்து கொண்டாளானலும், திலகவதி கணவனுக்கும் மங்கைக்கும் பிள்ளைகளுக்கும் ஆறுதல் மொழி புகலலானாள். இவளுடைய தாய் வீட்டுக்கும் மற்றும் முக்கியமான உறவினருக்கும் தகவல் சொல்லி வரவழைக்கலாம் என்று சதானந்தம் முயன்றதைக்கூட, அவள் ‘அவசரப்பட்டுச் சொல்லியனுப்ப வேண்டாம்; பின்னால் பார்த்துக் கொள்ளலாம்’ என்று கூறித் தடுத்துவிட்டாள். அவள் தன் அருமருந்தன்ன கணவனின் மடிமீது தலையை வைத்துத் தான் அமைதியாக உயிர்விட வேண்டுமென்று விரும்பினாள். இவ்வளவு நெருக்கடியான சமயத்திலும் வீட்டில் தங்காமல் பொறுப்புணர்ச்சியின்றி சிவன் எங்கெங்கோ சுற்றிவிட்டுக் காலங் கடந்து வருகிறானே என்று ஒரு புறம் அவள் மனம் கவன்று கொண்டுதானிருந்தது. இத்தருணத்தில் விசுவநாதன் புத்தசாலித்தனமாக நடந்து கொண்டான்.