பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


11

ன்று வெள்ளிக்கிழமை, காலை பத்து மணிதான் ஆகியிருக்கும்; ஆனாலும் சூரியன் தென் திசை நோக்கி விரைந்து செல்வதாலோ என்னவோ! நண்பகல் போல் வெய்யில் கடுமையாகக் காய்ந்து கொண்டிருந்தது. அரைமணி நேரத்துக்கு முன்புதான், நீதி மன்றத்துக்குப் போன சதானந்தம் பிள்ளை எதையோ எடுத்துக்கொண்டு போக மறந்து விட்டுப் போய் வழியில் திடீரென நினைத்துக் கொண்டவராய் வீடு திரும்பலானார். அவர் வீட்டு வாசலில் காலடியெடுத்து வைத்த சமயத்தில் வேலைக்காரி வேதம் ஏதோ வேலையாக வந்து கொண்டிருந்தாள். வீட்டு எசமானைக் கண்டதும் அவள் பயபக்தியுடன் ஒதுங்கி நின்று வழி விட்டுப் போகலானாள்.

வீட்டுக்குள் நுழைந்ததுமே, "மங்கை!" எனக் கூப்பிட வாயெடுத்த பிள்ளையவர்கள் பூஜையறையிலிருந்து வந்த - பிரார்த்தனை கீதத்தைக் கேட்டு, அழைப்பதைவிட்டுத் தம் அறைக்குச் சென்றார். மேல் உத்தரீயத்தை எடுத்து அங்கிருந்த சோபாவொன்றின் மீது போட்டுவிட்டு அவர் ஒரு பீரோவண்டை சென்று அதைத் திறந்து தான் எடுத்துக் கொண்டு போக வந்த சட்டப் புத்தகமொன்றைக் கையில் எடுத்தார்.

பூஜையறையிலிருந்து வந்த ஊதுவத்தியின் புகையும் நறுமணமும் அவற்றின்மீது மிதந்து வருவது போல் வந்த இனிய குரல் இசையும் அவருடைய உள்ளத்தையும் உடம்பையும் கிளுகிளுக்கச் செய்தன. பீரோவிலிருந்து எடுத்த சட்டப் புத்தகத்தை மேஜைமீது வைத்தது அவர் கரம். அடுத்து அவருடைய கால்கள் பூஜையறை நோக்கி நடக்கலாயின்.

"பிறந்து மொழிபயின்ற பின்எல்லாம் காதல்

சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன்- நிறந்திகழும்