பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தும்பைப்பூ

155


அம்மாவுடன் ஊருக்குப் போய்விடலாம் என்றுகூட நினைத்தேன். ஆனால் அம்மா அதற்கு இசையவில்லை. மற்றவர்களைப் போல் தாமும் அக்கா குடும்பத்தை நிராதரவாக விட்டுவிட்டுப் போவது சிறிதும் நியாமில்லை என்று எடுத்துச் சொன்ன பிறகுதான் உணர்ச்சி தாங்காமல் நான் புரிய இருந்த தவறு புரிந்தது. அத்துடன், அக்கா நீ கடைசி காலத்தில் எனக்கு இட்ட கட்டளையையும் நான் உனக்களித்த வாக்குறுதியையும் நினைத்துக் கொண்டேன். யார் என்ன சொன்னாலும் பொருட்படுத்தாமல் என் கடமையைச் சரி வரச் செய்து உன் குடும்பத்தைப் பாதுகாக்கவேண்டும் என்று முன்னைவிட அதிகமாக உறுதி கொண்டேன்.

அக்கா! நீ எங்களை விட்டுப் பிரித்து போகும் சமயத்தில் மொழிந்த ஒவ்வொரு மொழியையும் நினைத்துப் பார்த்தால் என் உடம்பு புல்லரிக்கிறது. "இது உன் வீடு; நீதான் இக் குடும்பத்தின் தலைவி; இங்கிருப்பவர்கள் உன் பராமரிப்பில் இருப்பவர்கள். இவர்களை உன்னிடத்தில் ஒப்படைத்துச் செல்கிறேன்" என்று கபம் தொண்டையை அடைக்கும் நிலையிலும் குழறியபடியே கூறிய சொற்கள் என்றும் என் நெஞ்சத்தில் நிலைத்திருக்கும். உன் ஸ்தானத்தில் நீ என்னை வைத்து, விட்டுச் சென்றிருக்கிறாய். ஆனால் அக்கா! நான் அதற்கு ஒரு சிறிதும் அருகதையுடையவள் அல்ல. நீ ஆவியாக மாறிவிட்டாலும் நீதான் இந்த இல்லத்தின் அரசி, தலைவி; ஆதலால், இந்தக் குடிலையே உன் கோவிலாகக் கொண்டு இங்கேயே நிலைத்திருந்து உன் குடும்பத்தையும், என்னையும் பாதுகாத்து வரவேண்டும். உன் ஏவல்படி நான் பணிப்பெண்ணாக இருந்து அத்தானுக்கும் பிள்ளைகளுக்கும் பணிபுரிந்து வருவேன். இக் குற்றேவலில் எக்குறையும் நேராதவாறு, தவறு ஏற்படாதவாறு நீதான் பார்த்துக் கொள்ள வேண்டும். என்னதான் வயதானாலும், மனைவியை இழந்திருக்கும் ஆண்பிள்ளை இருக்கும் வீட்டில் பருவப்பெண்ணொருத்தி அதிலும் இளமையிலேயே விதவையாய் விட்ட ஒரு பெண் - இருந்து குடும்பம் நடத்துவது சரியேயல்ல'