பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156

தும்பைப் பூ


என்று பலர் சொல்லுவதில் நியாயமிருக்கிறது; உண்மையுமிருக்கிறது. ஆனாலும், இருந்தாக வேண்டியிருக்கிறதே! என்ன செய்வது? எனவே, யார் என்ன சொன்னாலும் என் முன் நிற்கும் கடமையைச் செய்வதில் நான் சிறிதும் பின் வாங்கமாட்டேன். உனக்குக் கொடுத்துள்ள உறுதி மொழியிலிருந்து ஒரு சிறிதும் பிசகமாட்டேன். எந்தவிதமான அபவாதமும் களங்கமும், கெட்ட பெயரும் வந்தாலும் ஏற்றுக்கொள்ளத் தயாராயிருக்கிறேன். உனக்காக - உன் குடும்பத்துக்காக - எதை ஏற்கவும் நான் துணிந்துவிட்டேன்.

ஆனால் அக்கா! உனக்கு ஒரு சிறு வேண்டுகோள். தெய்வமாய்விட்ட உன்னிடம் ஒரு வரம் வேண்டுகிறேன். இளம் பருவங்காரணமாக என் உள்ளத்தில் இன்ப நினைவு எப்போதேனும் தப்பித் தவறி ஏற்படக் கூடும். சந்தர்ப்ப சூழ்நிலைகள் தவறுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்த முடியும். நானும் மனிதப் பிறவி தானே; மானிட ஜன்மத்துக்கு இயற்கையாகவுள்ள குற்றங்குறைகளும் பலவீனங்களும் எனக்கும் இருக்கும். ஆதலால், சந்தர்ப்ப உணர்ச்சிக்கோ, சூழ்நிலைக்கோ நான் அடிமையாய் விடாமல் என்னை நீ பாதுகாக்க வேண்டும். நான் எளிதில் அவ்வித அவல நிலைகளுக்கு ஆளாக மாட்டேன் இங்கு வந்த புதிதில் தற்செயலாக நிகழ்ந்துவிட்ட ஒரு சிறு தவறுதலுக்கே நான் அடைந்த மன வேதனையும், தண்டனையும் ஜன்ம ஜன்மத்துக்கும் மறக்காதே! ஆகையால் நான் தவறு புரிய மாட்டேன். தவறுவதற்கான சூழ்நிலைக்கு எப்போதும் இடம் அளிக்கமாட்டேன். என் உடம்பையும், உள்ளத்தையும் அவ்வளவு தூரம் ஒறுத்து மரத்துப் போகும் படியாகப் பக்குவப்படுத்தி வைத்திருக்கிறேன். ஆனாலும், அக்கா! ஒருவேளை என்னை அறிந்தோ அறியாமலோ தவறு நேர்ந்தால் அக்காலத்தில் நீ என்னைத் தடுத்தாட்கொள்ள வேண்டும். அக்கா! பிழை புரியாதவாறு தடுத்துப் பாதுகாக்க வேண்டும். தெய்வமாக நீ சாந்நித்தியங் கொண்டுள்ள இந்த வீட்டில் தவறு நேரமுடியாது. எங்கும் கண்ணுங் காதுமாயுள்ள உன்னையறியாமல் இங்கு ஒன்றும் நடக்காது