பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

தும்பைப் பூ

யாரோ வர்றாப் போல்இருக்குது” என்று கூறிக்கொண்டே உள்ளே ஓடினார்.

“திலகவதியின் பிள்ளைகள், நாம் வருகிறதை அவர்கள் தாயிடம் போய்ச் சொல்லுகிறார்கள்” என்று கூறிக் கொண்டே சிவகாமியம்மாள் வண்டிக் கம்பியைப் பிடித்துக் கொண்டு படிமேல் காலை வைத்து மெல்லக் கீழே இறங்கினாள்.

மங்கையர்க்கரசி வீட்டு வாயிலைத் திரும்பிப் பார்த்தாள். அவள் கண்கள் தற்செயலாக மேலே பார்த்த போது, மேன் மாடியிலிருந்து யாரோ ஒருவர் தன்னையே கூர்ந்து நோக்கிக் கொண்டிருப்பதைக் கவனித்து விட்டு நாணத்தால் சடக்கெனத் தலை கவிழ்ந்து கொண்டாள். ஆனால் அடுத்த கணம் அவள் உள்ளம், அது யார்? ஒரு வேளை அம்மா சொன்ன அத்தானயிருக்குமோ? என்று எண்ணியவாறு அவரைக் கடைக்கணிக்க ஆவல் கொண்டது.

சிவகாமியம்மாள் வண்டிக்காரனுக்குக் கூலி கொடுத்து அனுப்பி விட்டு, “மங்கையர்க்கரசி! அப்படிச் சிலை போல் நிற்கிறாயே? வா; உள்ளே போகலாம்” என்று கூறியவாறு அவள் கரத்தைப் பற்றிக் கூப்பிட்டாள்.

இதற்குள், “அத்தானாய்த்தான் இருக்கவேண்டும்; இல்லாவிட்டால் வேறு யார் அவ்வளவு சுதந்திரமாக மேன் மாடியில் இருக்க முடியும்?” என்று தனக்குள் முடிவுக்கு வந்த மங்கையர்க்கரசி, அவரைச் சரியாகப்பார்க்க வில்லையே? அவர் எப்படியிருக்கிறார் என்று பார்க்கலாம்: என்ற எண்ணத்தோடு நிமிர்ந்து பார்க்க முயன்றாள். ஆனால் அடுத்த கணம் நாணமும் அச்சமும் அவளைப்பிடித்து அழுத்தி விட்டது. நாம் அவரைப் பார்ப்பதைக் கண்டு விட்டால் நம்மைப் பற்றித் தப்பாக நினைத்துக் கொண்டால் என்ன செய்வது? என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள்.