பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தும்பைப் பூ

23

தாயுடன் சென்று கொண்டே இருந்த அவள், “அம்மா! மேலே நின்றிருக்கிறாரே! யாரம்மா அது! அத்தானா?” என்று கேட்டாள். சந்தேகமின்றி அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல் அவளுடைய வெட்க உணர்ச்சியையும் மீறி அவ்விதம் கேட்கச் செய்தது.


“அட, பார்த்ததுமே தெரிந்து கொண்டாயே, மங்கை!” என்று புன்சிரிப்புடன் கூறிய சிவகாமியம்மாள், “அவர்தான் உன் அத்தான். அவர் வீட்டுக்கு வரப் பயந்தாயே! அவர் எப்படியிருக்கிறார், பார்! பெரிய மனுஷர் மாதிரியில்லையா?” என்று கேட்டாள்.


அன்னையுடன் பேசுவதுபோல் வாயசைத்துப் பாவனை செய்தவாறு மங்கையர்க்கரசி மாடி மீதிருக்கும் சதானந்தம் பிள்ளையைப் பார்க்க மெல்லத் தலை நிமிர்ந்தாள்.


இச்சமயத்தில், “வாங்க சித்தி! வா, மங்கையர்க்கரசி!” என்று வரவேற்புக் கூறிக் கொண்டே முப்பது வயதுக்கு மேற்பட்ட மங்கையொருத்தி அவர்களை எதிர் கொண்டு அழைக்க வந்தாள். “நீங்க வருவது பற்றி ஒரு கடுதாசி போடக் கூடாதா? ஸ்டேஷனுக்கு ஆள் அனுப்பி இருப்போமே” என்று அவள் அங்கலாய்த்துக் கொண்டாள். சிவகாமியம்மாள் அவள் கைகளைப் பற்றியவாறே, “இல்லை, திலகம், பயணம் திடீரெனக் கூடிற்று. புறப்பட்டு விட்டோம். அதுக்கென்னஇப்போ?” என்று சமாதானஞ் சொல்லிவிட்டு, “குழந்தைகள் எல்லாம் செளங்கியந்தானே! உனக்கு இப்ப உடம்புக்கு ஒன்றுமில்லையே...?” என்று க்ஷேமம் விசாரிக்கலானாள்.


“எல்லாம் செளக்கியந்தான் சித்தி” என்று சுருக்கமாகப் பதிலளித்து விட்டு, மங்கையர்க்கரசியை ஒரு விதமாகப் பார்த்த வண்ணம், “என்ன, மங்கையர்க்கரசி வாய் திறக்காமலிருக்கிறாள்? பெரியவளாய் விட்டாளே! அதனாலா?” என்று புன்சிரிப்புடன் கேட்டாள்.