பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தும்பைப் பூ

27


"ஆமாம்' என்றான் சிறுவன்.

சதானந்தம் பிள்ளை மீண்டும் யோசனையில் ஆழ்ந்தார். தந்தை ஏதோ சிந்தித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த கணேசன் அவ்விடத்தை விட்டு வெளியேற முயன்றான். இச்சமயத்தில் கோகிலா அங்கு வந்து, "அப்பா; அம்மா கூப்பிடறாங்க, பலகாரம் சாப்பிடறதுக்கு" என்று கூப்பிட்டாள்.

"என்னம்மா!" என்று துணுக்குற்றுக் கேட்ட சதானந்தம் பிள்ளை, "ஓ! சிற்றுண்டி சாப்பிடக் கூப்பிடுகிறார்களா? இதோ வந்து விட்டேன், கோகிலா!" என்று சொல்லிக் கொண்டே எழுந்தார்.

கூடத்தில் சிவகாமியம்மாளுடனும், மங்கையர்க்கரசியுடனும் ஏதோ பேசிக் கொண்டிருந்த திலகவதி, கணவன் வருகையைக் கண்டதும், "வாங்க, யாரு வந்திருக்கிறதுன்னு பார்த்தீங்களா?..." என்று புன்னகையுடன் கேட்டாள்.

"யாரு? தெரியவில்லையே! நம்ம ஊரிலிருந்து வந்திருக்கிறார்களா?" என்று அவர்களை ஒருவிதமாகப் பார்த்தவாறு கூறினார். இதுதான் சமயமென்று அவருடைய கண்கள், மங்கையர்க்கரசியை நன்றாகப் பார்க்கலாயின. "அவர்களுக்குப் பலகாரம் கொடுத்தையா? முதலில் அதைக் கவனி. மற்றதெல்லாம் அப்புறம் பேசலாம்" என்று உபசாரமாகக் கூறினார்.

மாடிப் படியிலிருந்து யாரோ - இறங்கி வரும் காலடியோசையைக் கேட்டதும் திரும்பிப் பார்த்த மங்கையர்க்கரசி அக்காவின் கணவன் வருவதையறிந்து நாணிக் கோணித் தாயின் பின்னே ஒதுங்கி நின்றாள். அவள் கண்கள் மட்டும் அவர் பக்கம் சுழன்று கொண்டிருந்தன. இந்நிலையில், மனைவியின் பேச்சைச் சரியான வாய்ப்பாகக் கொண்டு சதானந்தம் பிள்ளையின் பார்வை தன்மீது விழுவதைக் கண்டதும், வெட்கத்தால் முகம் சிவக்கத் தலை கவிழ்த்துக் கொண்டாள்.