பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தும்பைப் பூ

29

“அப்படியா?” என்று அசட்டுச் சிரிப்புடன் கேட்டார். அவர் மனம், “ஐயோ, அதை ஏன் இவள் இப்போது ஞாபகப்படுத்துகிறாள்” என்று அங்கலாய்த்தது.


சிவகாமியம்மாள், “உங்களுக்குக் கல்யாணம் நடக்கும் போது மங்கைக்கு மூணு வயதிருக்கும்...” என்றாள்.


“அப்படியா? கலியாணத்தின்போதுகூட நான் சரியாகப் பார்க்கவில்லை...” என்றார் சதானந்தம்.


“மங்கை பெரியவளாகி விட்டாளோ இல்லையோ? அதுதான் அத்தானைப் பார்த்து வெட்கப்படுகிறாள்... சிறுசாயிருக்கும்போதே உங்களைப் பார்த்தால் ஒடியொளிவாள். இப்போது சொல்லணுமா?” என்று கூறிய திலகவதி, மங்கையர்க்கரசியின் தோள்களை அன்புடன் பற்றி, “அத்தானைக் கண்டால் ஏன் இப்படி கூச்சப்படுகிறாய்? உன்னை என்ன அவர் விழுங்கியா விடுவார்?...சும்மா இப்படி வா மங்கை!” என்று சொன்னாள்.


சிவகாமியம்மாள், “அவளும் பெரியவளாகிக் கலியாணங் கட்டிக்கொண்டு வாழ்ந்து தீர்த்து விட்டாள் இல்லையா?” என்று பெருமூச்சு விட்டுக்கொண்டே சொல்லிப் பின் “அவள் இந்த நிலைக்கு வந்தபின், இப்போது தானே உங்களையெல்லாம் பார்க்கிறாள்? அதுதான் இவ்வளவு சங்கோஜப்படுகிறாள்?” என்று ஏதோ சொல்ல வேண்டும் எனச் சொன்னாள்.


“இந்தப் பெண்களுக்கே புத்தி கிடையாது என்று பெரியவர்கள் தெரியாமலா சொன்னார்கள். எந்தச் சமயத்தில் எதைச் சொல்லணும்? எதைப் பேசணும்? என்று தெரியவில்லையே?...” என்று சதானந்தம் தனக்குள் சொல்லிக் கொண்டார்.

தாயின் அசட்டுப் பேச்சு மங்கையர்க்கரசியை ஒரு கணத்தில் துயரத்தில் மூழ்கடித்து விட்டது. அவள் குமுறி வரும் துக்கத்தை மறைக்க வெகுபாடுபட்டாள். மற்றவர்கள்