பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

தும்பைப் பூ

அவளுடைய அப்போதைய நிலையை உணரவில்லை. மானத் தத்துவத்தைத் தமது பரந்த அனுபவத்தால் ஒருவாறு உணர்ந்திருக்கும் சதானந்தம் பிள்ளை அவளுடைய துயர நிலையை ஒரு நொடியில் உணர்ந்து கொண்டார். ஆகவே, அவர் அவளை மேலும் சங்கடமான நிலையில் வைக்காமல் தவிர்க்க வேண்டி, “சரி, திலகம்! அவர்களுக்கு ஆவனவற்றைக் கவனி. நான் காபி சாப்பிட்டுவிட்டுச் சற்று வெளியே போக வேண்டும்” என்று கூறியவாறே மெல்ல அவ்விடத்தை விட்டுப் போகலானார்.


“சித்தி, இருங்கள். நான் போய் மாப்பிள்ளையை அனுப்பிவிட்டு வருகிறேன்” என்று கூறிவிட்டுக் கணவன் பின்னே செல்ல அடியெடுத்து வைத்த திலகவதி, “கோகிலா, இங்கே வா! பாட்டியையும் சித்தியையும் கூட்டிக்கொண்டு போய் பலகாரம் கொடு, இதோ வந்துவிடுகிறேன்” என்று சொல்லிச் சென்றாள்.


எதிர் அறையிலிருந்து மங்கையர்க்கரசியை பார்த்துக் கொண்டிருந்த கோகிலா உடனே வெளியே வந்து, “வாங்க சித்தி, வாங்க பாட்டி” என்று புன்முறுவலுடன் கூறியவாறு, மங்கையர்க்கரசியின் கரத்தை அன்புடன் பற்றினாள்.


“என்ன மங்கையர்க்கரசி, குழந்தை கூப்பிடுகிறாள். எங்கோ கவனமாய் நின்றிருக்கிறாயே! வா போகலாம்” என்று சிவகாமியம்மாளும் அழைக்கலானாள்.


துயரத்தில் உள்ளத்தைத் தோயவிட்டுத் தன்னை மறந்திருந்த மங்கையர்க்கரசி ஸ்பரிசத்தாலும் பேச்சாலும் உணர்வு பெற்றாள். இமைகளில் பணித்திருந்த கண்ணீரை முந்தானையால் மெல்லத் துடைத்துக் கொண்டே கோகிலாவுடன் போகலனாள்.