பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தும்பைப் பூ

32

உணரவேயில்லை. காலடியோசைகூட அவளை விழிப்புறச் செய்யவில்லை. இந்நிலை திலகவகிக்கு ஒரே வியப்பை விளைவித்தது. ஆகவே அவள், “மங்கை, மங்கை” என்று மெல்லக் கூப்பிடலானாள். மூன்று நான்கு முறை அழைத்த பின் தான் மங்கையர்க்கரசி தன்னுணர்வு பெற்றாள். உடனே அவள் துணுக்குற்று பரபரப்புடன் முந்தானையால் கலங்கியிருந்த தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள். அவளுடைய இச்செயல் திலகவதிக்கு மேலும் வியப்பையும் திகைப்பையும் அளித்தது.

“ஏன், மங்கை? அழுது கொண்டிருந்தாயா? என்ன?” என்று கேட்டாள் திலகவதி.

“வாங்க, அக்கா” என்று கூறிக் கொண்டே எழுந்து நின்ற மங்கையர்க்கரசி, “என்ன கேட்டீர்கள்?” என்றாள்.

“அழுது கொண்டிருந்தாற்போலிருக்கிறதே?”

“இல்லையே, அக்கா!” என்று கூறிக்கொண்டே வெளியே எரிந்து வந்துகொண்டிருந்த விறகைத் தள்ளுவது போலத் திரும்பிக் குனிந்து உட்கார்ந்தவாறு முகத்தை மறைத்துக் கொள்ளலானாள்.

“முகங்காட்டுகிறதே! ஏன் மறைக்கப் பார்க்கிறாய், மங்கை”

“அதெல்லாம், ஒன்றுமில்லை, அக்கா! அடுப்பை ஊதிய போது தீப்பொறி பறந்து வந்து கண்ணில் பட்டுவிட்டது. அதனால்தான்...”

திலகவதி அருகு சென்று இறங்கிக் குனிந்திருந்த அவளுடைய முகத்தைப் பிடித்து நிமிர்த்தி, “மங்கை, ரொம்ப சாமர்த்தியமாகப் பேசுகிறாயே! பட்டணத்துக்கு வந்து பழகிக் கொண்டாயா என்ன?” என்று புன்முறுவலோடு கூறினாள்.

மங்கைதுர்க்கரசியால் அதற்கு மேல் ஒன்றும் சொல்ல முடியவில்லை.