பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தும்பைப் பூ

33

“எழுந்திரு; மங்கை காபிக்கு இதற்குள் என்ன அவசரம்?” என்று கூறியவாறே திலகவதி மங்கையர்க்கரசியின் தோள்களைப் பற்றி எழும்பினாள்.

“குழந்தைகள் வரும் நேரமாய்விட்டதே, அக்கா? பஜ்ஜி போடலாமென்று...”

“இப்பத்தானே நாலடித்தது. அவர்கள் வர இன்னும் ரொம்ப நேரமிருக்கிறது, மங்கை. தண்ணிர்க் குடத்தை அடுப்பின் மேலே வைத்துவிட்டுவா, இப்படி!”

திலகவதி வற்புறுத்திச் சொல்லிய பின், மங்கையர்கரசியால் மீற முடியவில்லை. அவள் பின்னே பேசாமல் நடந்தாள்.

கூடத்துக்கு வந்ததும் திலகவதி ஆழ்ந்த யோசனையோடு மங்கையர்க்கரசியின் முகத்தைப் பார்த்தவாறு, “உட்கார், மங்கை” என்று கூறிக் கொண்டே அமர்ந்தாள்.

எதிரில் உட்காரப் போன மங்கையர்க்கரசி, திடீரென ஏதோ நினைத்துக் கொண்டவள்போல், “இரு, அக்கா ஒவல் போட்டுக் கொடுக்க மறந்துவிட்டேன். ஒரு நொடியில் கொண்டு வந்து விடுகிறேன்......” என்றாள்.

“பரவாயில்லை, அப்புறம் குடிக்கிறேன், நீ உட்கார்” என்று கூறி அவள் கையைப் பற்றி அமர்த்தினாள் திலகவதி.

வேறு வழியின்றி மங்கையர்க்கரசி உட்கார்ந்தாள். ஆனால் திலகவதியை ஏறிட்டுப் பார்க்க அவள் வெட்கப்பட்டாள்.

சில விநாடிகள் அவர்களிடையே மெளனம் நிலவியது. மங்கையர்க்கரசியின் முகத்தை ஊடுருவிப் பார்த்த திலகவதி, “மங்கை, என்னிடம் ஒளிக்காமல் சொல்லு, ஏன் நீ அழுது கொண்டிருந்தாய்...... ?” என்று கேட்டாள்.

“ஒன்றுமில்லை, அக்கா!”

“இல்லை; நீ ஏதோ மனதில் நினைத்துக் கொண்டு குமுறுகிறாய்?......”