பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தும்பைப் பூ

53

காங்கிரஸ் பெயரால் ஏன் அங்கத்தினர்களை அனுப்ப வேண்டும்? குப்பைத்தொட்டி வேலை, ரோடு போடுகிற வேலைகளைக் கவனிப்பதற்கு யாராயினும் போய்த் தொலையட்டுமே!......” என்று சலிப்புடன் சொன்னார்.


சதானந்தம் பிள்ளை ஏதோ சொல்லப் போகும் சமயத்தில் சிவகுமாரன் அவசர அவசரமாக அங்கு வந்து “அப்பா! அப்பா! சமாசாரங் கேட்டீர்களா? அளகேசன் தான் தலைவராக வந்துவிட்டார். காங்கிரஸ் அபேட்சகருக்குப் பத்தே ஒட்டுகள்தான் கிடைத்தன” என்று சொன்னான்.


சதானந்தம் பிள்ளையின் முகத்தில் துயர இருள் சூழ்ந்தது.


மாசிலாமணி முதலியார் துள்ளிக் குதித்து, “நான் அப்போதே சொன்னேனே! பார்த்தீர்களா? அண்ணா! இந்த அயோக்கியப் பயல்கள் துரோகஞ் செய்துவிட்டிருப்பார்கள்...” என்றார்.


சிவகுமாரன், “காங்கிரஸ் மெம்பர்களில் பலபேர் அளகேசனுக்குத்தான் ஒட்டுப் போட்டார்களாம். சில பேர் சபைக்கு வரவில்லையாம். சிலர் நடுநிலை வகித்தனராம்...” என்று தேர்தல் முடிவு பற்றி விளக்கிக் கூறலானான்.


சதானந்தம் பிள்ளை மெல்லப் பேசத் தொடங்கி, “இதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. மூன்று நான்கு ஆண்டுகளாகவே, இப்படித்தான் நடந்து வருகிறது. காங்கிரஸ் அபேட்சகர்களை அக்கட்சி யங்கத்தினர்களே, காலை வாரி விடுகின்றனர்... உம்; இன்னும் என்னென்ன நடக்கப் போகிறதோ!” என்று கூறியவர், “ஆமாம், சிவகுமாரா! நீ நகரசபைக்குப் போயிருந்தாயா? என்ன?” என்று கேட்டார்.


"ஆமாம்; அப்பா! கல்லூரியிலிருந்து அப்படியே வேடிக்கை பார்க்கப் போனேன்” என்றான் சிவகுமாரன் உற்சாகமாக.