பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

தும்பைப் பூ

களின்-சந்தர்ப்பவாதிகளின் பதவிப் போட்டிக்காக-அவர்களுடைய சுகபோகங்களுக்காக-நாட்டு மக்களின் வாழ்க்கை பணயமாக வைக்கப்பட வேண்டுமா? என்ன! ஆகவே தங்களுடைய இன்றைய துன்பங்களுக்குக் காரண கர்த்தர்களாக இருக்கும் சுயநலப் பிண்டங்களை-கயவர்களை-ஏன் காங்கிரஸில் சேர்த்தீர்கள்? சட்டசபையில் அமர்த்தினீர்கள்? மந்திரிகளாக்கினீர்கள்? என்று, பொதுமக்கள் உங்களைக் கேட்கத் தான் செய்வர்?...”

சதானந்தம் பிள்ளை, “கேட்கட்டும்! கேட்காமல் போகட்டும், இன்று நடக்கும் பகற் கொள்ளைகளுக்கும் லஞ்ச லாவணியங்களுக்கும் என்னைப் போன்ற பழைய காங்கிரஸ்காரர்கள் பரிகாரந் தேடித்தானாக வேண்டும்; பதில் சொல்லத்தான் வேண்டும்...”

மாசிலாமணி முதலியார், “அண்ணா, நான் உங்கள் மீது குற்றஞ்சாட்டுவதாக எண்ணக் கூடாது. கோனார் விஷயமாக நீங்கள் சொன்னதைக் கேட்டதிலிருந்து, என் உள்ளம் கொதிப்படைந்திருக்கிறது. உங்களைப் போன்றவர்கள் விட்டுக்கொடுத்து, கண்டவர்களை யெல்லாம் சட்டசபைக்கு அனுப்பியதனால் எற்பட்ட விளைவுதான் இது சட்டசபை, மந்திரிசபைகளின் கூத்து இப்படியென்றால், நகரசபை, ஜில்லா சபைகளின் நடவடிக்கை இன்னும் மோசமாய் வருகிறது! நம்ம நகரசபையில் இன்று தலைவர் தேர்தல் நடக்கிற தல்லவா! அதைப்பற்றி ஒரு மாதத்துக்கு மேலாக அமளிப்படுகிறது. இத் தலைவர் தேர்தலில் நான்கு பேர் நிற்கிறார்களாமே! ஆனால் பெரியகோடீஸ்வரர் குமாரரான அளகேசன் தான் தலைவராக வருவார் என்று எல்லோரும் உறுதியாகச் சொல்லுகிறார்கள் காங்கிரஸ் பெயரால் அங்கம் வகிப்பவர்களின் யோக்கியதையைத் தெரிந்துதான் கூறுகிறார்களோ! ஏனென்றால் அளகேசன் நகர சபையிலுள்ள முக்கால்வாசிப் பேர்களைத் தனது பணத்தால் விலைப்படுத்தித் தன் பக்கம் வைத்திருக்கிறாராம். இந்நேரம் தேர்தல் நடந்து விட்டிருக்கும். ஆமாம் அண்ணா! இந்த ஸ்தல ஸ்தாபனங்களில் கூடக்