பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தும்பைப் பூ

59

தளதளத்த தேகமும் களை சொட்டும் முகமும், கம்பீரத் தோற்றமும் அவளுடைய இளம் உள்ளத்தை ஒருங்கே கவர்ந்தன.


அவள் ஊரிலிருந்து வந்து ஆறு மாதங்களுக்கு மேலாகி விட்டாலும், இதுவரை அவ்வளவு அணுக்கமாய் இருந்து அவரைப் பார்த்ததில்லை; பார்க்கச் சந்தர்ப்பம் வாய்த்ததில்லை. அவள் ஊரிலிருந்து வந்து வண்டியை விட்டு இறங்கிய சமயத்தில் மேன்மாடியிலிருந்து தன்னை நோக்கிக் கொண்டிருந்த அவரைத் தற்செயலாகப் பார்த்தாளே! அது தான் ஒரளவு சரியாகப் பார்த்தது என்று சொல்லவேண்டும். அடுத்து அவள் திலகவதியால் நேருக்கு நேர் அறிமுகஞ் செய்து வைக்கப்படுகையில், கடைக் கணித்து அவருடைய பெருந்தன்மையான தோற்றத்தில் மனம் லயித்தாள். அதற்கு அப்புறம் அவள் ஒரே வீட்டிலிருந்து ஊடாடி அடிக்கடி சந்திக்க வேண்டிய சந்தர்ப்பமும் நெருங்கிப் பழகக் கூடிய வாய்ப்பும் ஏற்பட்டாலும்கூட, நாணமும் பயிர்ப்பும் மிகவுடைய அவள் அவரை ஏறிட்டுப் பார்க்கக் கூசியிருந்தாள்.


மறைவிலிருந்து-மற்றவர்கள் அவளைக் கவனிக்கக் கூடாத இடத்திலிருந்து-அவள் அவரை நோக்கி மகிழ்வாள். அது வெண்திரைக்குப் பின் தெரியும் உருவம்போல் தெளிவாகத் தெரியாமலிருந்தாலும், தூரத்திலிருந்தாயினும் அவரைக் காண்பதில் அவளுக்கு ஒரு தனி ஆனந்தம் உண்டாயிற்று. அவர் பேசும் பேச்சுக்களைச் செவி மடுத்துக் கேட்பதில் அவள் எல்லையில்லா மகிழ்ச்சியடைந்து வருவாள்.


இன்றுதான் மங்கையர்க்கரசிக்கு சதானந்தம் பிள்ளையை ஏகாந்தமாக, நேருக்கு நேர் பார்க்கவும், பேசவும், கூடிய சந்தர்ப்பம் வாய்த்தது. இந்த அருமையான வாய்ப்பு அவளுக்கு ஒரு பக்கம் களிப்பைத் தந்தாலும், மற்றொருபுறம் நாணத்தையும் அச்சத்தையும் அளித்தது. மூக்குக் கண்ணாடி விழப்போவதைக் கண்டதனால் ஏற்பட்ட பதற்றம் மறைவாக