பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

தும்பைப் பூ

நன்றாயிருந்திருக்கும்’ என்று கருதி அவள் மனம் குறைப்பட்டது.


அடுத்து சதானந்தம் பிள்ளை ஒமப்பொடியை உலுத்துத் தின்று கொண்டே, “எங்கே வேலைக்காரி வரவில்லையா, இன்னும்?” என்று சுற்று முற்றும் பார்த்துக் கொண்டே கேட்டார்.


“இல்லை; அத்தான். அவள் எங்கோ சொந்தக்காரர் வீட்டுக்குப் போக வேண்றுமென்று சொல்லிவிட்டுப் போனாள்.”


அவர் நேரில் பார்த்துக் கேட்டதற்குத் தலைகுனிந்து கொண்டே பதில் சொன்னாள். அவர் நோக்கும் போது இவள் தலை கவிழ்ந்து கொள்வதும், அவர் குனிந்து பலகாரம் சாப்பிடுகையில் இவள் அவரை ஆசையோடு பார்த்து மகிழ்வதும் ஒசையெழாதவாறு மெல்ல நகைப்பதுமாயிருந்தாள். நேரம் ஆக, ஆக, அவளைப் பற்றியிருந்த நாணமும் அச்சமும் மெல்ல மெல்ல அகன்று கொண்டு வந்தன.


சதானந்தம் பிள்ளை, “அப்படியானால், இன்று வீட்டு வேலைகளையெல்லாம் நீயாகவேயா செய்தாய்? ஐயோ” என்று அநுதாபத்துடன் மொழிந்தவர், “ஏன்? கோகிலாவைப் பள்ளிக்கு அனுப்பாமல் நிறுத்தி உனக்கு ஒத்தாசையாக வைத்துக் கொள்வதுதானே! மங்கை?” என்று சொன்னார்.


“படிக்கப் போகிற குழந்தையை நிறுத்துவதா? நன்றாயிருக்கிறது, அத்தான்! இது என்ன பிரமாத வேலை? இதைவிட எவ்வளவோ பெரிய வேலைகனையெல்லாம் கிராமங்களில் செய்வோமே! நீங்கள் பார்த்ததில்லையா? பட்டணத்தில்தான் எடுத்ததற்கெல்லாம் வேலைக்காரர்கள் அமர்த்தப் பட்டிருக்கிறார்கள்......” என்று மங்கை சமாதானம் சொன்னாள்.