பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தும்பைப் பூ

63

சதானந்தம் பிள்ளை இது கேட்டுச் சிரித்தார். “அப்படியானால் பட்டணத்திலிருப்பவர்கள் சோம்பேறிகள் என்று சொல்லுகிறாய், இல்லையா? அது என்னவோ உண்மைதான். உன் அக்கா கூடப் பட்டணத்தில் வாழ்க்கைப்பட்டுச் சோம்பேறியாய் விட்டதாலும், உடலுழைப்பு இல்லாததாலும் தான் நோய் நொடிக்கு நிலைக்களமாய் விட்டாள். இல்லா விட்டால்...”


மங்கை குறுக்கிட்டுப் பேசத் தொடங்கி, “நீங்க ஒன்று, அத்தான். அக்கா சோம்பேறியாயிருந்தால் உங்கள் குடும்பம் இவ்வளவு உன்னத நிலைக்கு வந்திருக்க முடியுமா? உழைத்து உழைத்துத்தான் அக்கா உருக்குலைந்து போயிருக்கிறாள்.....”


“தங்கை அக்காவுக்குப் பரிந்து பேச வேண்டியதுதானே! தனக்கு வாரிசாகத்தான்...”


இவ்வார்த்தைகளால் மங்கையர்க்கரசி மீண்டும் நாணமுற்று அவ்விடத்தை விட்டு மெல்ல நழுவலானாள்.


இதைக் கண்ட சதானந்தம் பிள்ளை, “எங்கே மங்கை, போகிறாய்” என்று வினவினார்.


“இருங்கள் அத்தான், காபி கொண்டு வருகிறேன்” என்று கூறிக் கொண்டே போனாள் மங்கை.


தண்ணிர் டம்ளரைப் பார்த்துக் கொண்டே, “காபி கொண்டு வந்து வைத்திருக்கிறாய் என்றல்லவோ பார்த்தேன்” என்றார் சதானந்தம் பிள்ளை.


அவர் சொல்வி வாய் மூடுவதற்கு முன், மங்கை காபியைச் சூடாக்கிக் கொண்டு வந்து அவர்முன் வைத்தாள். “பலகாரம் சாப்பிடுவதற்குள் ஆறிப்போப் விடுமென்று முன்னேயே கொண்டு வரவில்லை” என்று அவள் அவர் கேட்டதற்கு இப்போது சமாதானஞ் சொன்னாள்.