பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

தும்பைப் பூ

மங்கையினுடைய ஒவ்வொரு சொல்லும் சதானந்தம் பிள்ளைக்குக் களிப்பை பூட்டியது. அவளுடைய சாதுரியத்தையும் சமயோசித புத்தியையும் அவர் வெகுவாக உணர்ந்து பாராட்டினார். அவள் வந்ததிலிருந்தே தம் குடும்ப நிலை சீர்பட்டு வருவதையும், எல்லா வகையிலும் அவள் தம் மனைவிக்கும் மக்களுக்கும் பேருதவியாயிருந்து வருவதையும் அவர் கண்டறிந்து வரலானார். தம் காரியங்களையும் அவள் எவ்வளவு கனிகரமாகச் செய்து வருகிறாள் என்பதையும் அவர் நன்கு அறிந்திருந்தார். இவ்வளவு நற்குணமும் குடும்பப் பாங்கும் உடைய பெண்ணுக்கு ஆண்டவன் நல்வாழ்வு அளிக்காமல் போய்விட்டானே என்று அவர் உள்ளம் எண்ணிப் பச்சாதாபப்பட்டது. முதன் முதலாகப் பார்க்கையிலேயே மங்கையின் வைதவ்ய கோலம் அவருடைய இரக்க நெஞ்சத்தை மிகவும் வருத்தியது.


இந்த அமங்கல கோலத்தை எப்படி மாற்றுவது என்று அவர் பலநாட்கள் சிந்தித்துக் கொண்டிருந்தார். பொதுவாக நகர நாகரீகம் வெகுவாகப் புகாத கிராமங்களில் உள்ள பெண்கள் கொண்டுள்ள கொள்கைகளைப் போலவே, மங்கையும் சமுதாயக் கட்டுப்பாட்டுக்கும் சம்பிரதாயங்களுக்கும் மிகவும் கட்டுப்பட்டிருப்பது மட்டுமல்லாமல் அழுத்தமான நம்பிக்கையும் கொண்டிருப்பதை அவர் நன்கு அறிந்து வந்தார். ஆதலால், அவளே, அவள் போக்கிலிருந்து திருப்புவது அவ்வளவு சுலபமல்ல என்று அவர் உணர்ந்தார். ஆனால் தம் மனைவி சமயம் நேரும்போதெல்லாம் அவளுக்கு இதமாக விஷயங்களைக் கூறி உடை முதலிய விஷயங்களில் மாறுதலை ஏற்படுத்த முயன்று வருவது அவருக்கு ஒரளவு மகிழ்ச்சியையும் ஆறுதலையும் அளித்து வந்தது.


தம் மனைவியின் உபதேசம் ஏதாயினும் மாறுதலை உண்டு பண்ணியிருக்கிறதா என்று அறியும் எண்ணத்தோடு அவர் அவளை இச்சமயம் ஏற இறங்கப் பார்க்கலானார். முன் வெள்ளைச் சேலையை உடுத்தியிருந்த அவள் இப்போது