பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தும்பைப் பூ

65

பழுப்புப் புடவையைத் தரித்திருந்தாள். வேறு விசேஷ மாறுதல் எதையும் அவரால் கண்டு உணர முடியவில்லை.


ஆகவே அவர் காபியைக் குடித்துக் கொண்டே, “ஆமாம்; மங்கை! நீ ஏன் வாங்கி வந்திருக்கும் கொரனாட்டுச் சேலையை இன்னம் கட்டிக் கொள்ளாமலிருக்கிறாய்? அக்கா கொடுக்கவில்லையா? செயின் கூட...”


அவர் பேசி முடிக்கும் முன்னே மங்கை இடை மறித்து, “அக்கா கொடுத்தார்கள், அத்தான்! நான் தான் கட்டிக் கொள்ளவில்லை. எனக்கு எதற்கு அத்தான், பட்டுப் புடவை, தங்கச் செயின் எல்லாம்? நான் இப்படியே இருந்து காலத்தைக் கழித்துவிட்டுப் போகலாமென்று...”


சதானந்தம் பிள்ளை, “அசட்டுத்தனமாகப் பேசாதே, மங்கை! நீ என்ன தொண்டு கிழவியாய் விட்டாயோ? வீட்டில் ஒரு காலும் சுடுகாட்டில் ஒரு காலுமாயிருக்கும் கிழங்கள்கூட சிறுசுகள் மாதிரி சிங்காரித்துக் கொள்ள ஆசைப்படுகின்றன. இந்தக் காலத்திலே! நீ என்னடா என்றால்......”


“அத்தான், நான் உங்கள் சொல்லை எதிர்த்துப் பேசுவதாக எண்ணக் கூடாது. நான் ஏழ்மையிலேயே பிறந்தவள்; ஏழ்மையிலேயே வளர்ந்தவள்; இடை நடுவிலே எதற்கு இந்த ஆடம்பரமெல்லாம். ஏதோ நான் இருக்கிறபடி இருந்து விட்டுப் போகிறேன்...... ”


“உன்னைப் போலப் பைத்தியக்காரியை இந்த உலகத்தில் பார்க்க முடியாது. எல்லோரும் பிறக்கும் போதே பணத்தோடும் சொத்து சுதந்திரத்தோடும் பிறக்கவில்லை. செல்வம் செல்வாக்கோடு ஜனனமாகிறவர்கள் கூடப் பின்னால் ஏழைகளாகி ஏங்கித் தவிப்பதை நாம் பார்க்கிறோம். வீண் டாம்பீகமும் கர்வமும் கூடாதேயொழிய வாழ்க்கையில் வேண்டிய வசதி செளகரியங்களைச் செய்து கொள்வதில் தவறில்லை. ஆதலால் நீ...” என்று சொல்லிக் கொண்டே,