பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தும்பைப் பூ

75


“பரவாயில்லை, கொஞ்சம் சாப்பிடுங்கள்.”

உள் பக்கமே பார்வையை ஒட்டிக் கொண்டிருந்த மற்றொரு நண்பர், சதானந்தம் பிள்ளையை நோக்கி “குழந்தை உங்க மகளுங்களா?” என்று மெல்லக் கேட்டார்.

இக்கேள்வி மங்கையின் மையலில் மனதை லயிக்கவிட்டுக் கொண்டிருந்த சதானந்தம் பிள்ளைக்குச் சவுக்கடி கொடுப்பது போலிருந்தது. அவர் எதிரிலிருந்த நிலைக் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டார். முன் பக்கத்தில் லேசாக வெளுத்துவரும் தலை மயிர் அவர் மங்கைக்குத் தந்தை நிலையில் இருக்கத் தக்கவர்தான் என்று சாட்சி சொல்லியது. இந்நினைவில் சில வினாடிகள் ஸ்தம்பித்துப் போயிருந்த பிள்ளையவர்கள் சுதாரித்துக் கொண்டு, “இல்லை, என் மைத்துனி” என்று கூறினார்.

இக் கேள்வியும் பதிலும் மங்கையின் செவிகளிலும் விழலாயின. இவை அவளை என்னென்னவோ எண்ணச் செய்தன. இந்நிலையில் மீண்டும் அங்குப் போக விரும்பாமல் கோகிலாவிடம் காபி கொடுத்தனுப்பினாள்.

“இவள்தான் என் பெண்; ஒரே பெண் தான்” என்று காபி கொண்டு வந்து கொடுத்த கோகிலாவைக் காட்டிக் கூறினார் சதானந்தம் பிள்ளை.

7

காலைக் கதிரவன் வானத்தில் திட்டுத் திட்டுகளாய்ப் படர்ந்திருந்த வெண் மேகங்களை விலக்கிக் கொண்டு விரைவாக மேற்கு நோக்கிப் பிரயாணஞ்செய்து கொண்டிருந்தான். சூரிய வெப்பத்தால் சுறுசுறுப்புக்கொண்ட மக்கள் தத்தம் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். நெற்றி வியர்வை நிலத்தில் விழ உடம்பை உழைத்து வயிற்றுப் பிழைப்புக்கு வழி தேடும் பாட்டாளியிலிருந்து நகத்தில் அழுக்குப்படாமல்