பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தும்பைப் பூ

85


‘வந்த புதுசில் அப்படித்தான் இருந்தாள்! பின்னல்தான் மெல்ல மெல்லக் கூச்சத்தை விட்டுச் சகஜமாகப் பழகத் தொடங்கி விட்டாளே! நெருங்கிப் பழகப் பழக நெகிழ்ந்து போக வேண்டியதுதானே?’

‘பாவம்! அவள் சின்னஞ்சிறுசுதானே! கட்டினவனிடம் என்ன சுகத்தைக் கண்டாள்? அதற்கு முன்பேதான் அவன் கண்ணை மூடிவிட்டானே! அவளுக்கு ஆசையிருக்காதா நெஞ்சத்தில் கொஞ்சமாயினும்? தன்னொத்த பெண்களெல்லாம் இன்ப சுகங்களை அனுபவித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து வருகிறாளல்லவா இன்ப நினைவு எள்ளளவாயினும் எழாமலிருக்குமா?’

‘அதற்கு? என் ஆம்படையானைப் பிடித்துக் கொள்ள வேண்டுமா, என்ன? எனக்குப் போட்டியாகவா புறப்பட வேண்டும்? உடன் பிறந்தவன் உதறித் தள்ளியவளை உவப்புடன் வரவேற்றுக் காப்பாற்றி வருகிறேனே! அதற்குக் கைம்மாறா இது?’

இப்படித் தனக்குள்ளாகவே கேள்விகளை எழுப்பிப் பதிலும் கண்டு வந்த திலகவதி, பருவப் பசியால் பரதவிக்கும் மங்கை இளமையிச்சையைப் பூர்த்தி செய்துகொள்ள, தன் கணவனை ஆளாக்கிக்கொண்டு விட்டாள் என்ற தீர்மானத்துக்கு வந்ததும், இடையிடையே அவள்பால் உண்டான இரக்கத்தையும் பச்சாதாபத்தையும் விரட்டி விட்டு ஆத்திரமும் வஞ்சமும் கொள்ளலானாள்

ஆகவே, அவள்தான் அடிக்கடி மங்கையை அநாவசியமாகக் கடிந்து கொள்வதற்காக வருத்தந் தெரிவித்து ஆறுதல் கூற வேண்டுமென்று முதலில் எண்ணியதை விட்டு, வீராப்பாகவே நடந்து கொண்டாள்.

பிள்ளைகளனைவரும் பள்ளிக்கூடம் போன பின்னர், மங்கை, இந்நிலையிலும் மனவருத்தத்தை மறைத்துக் கொண்டு, திலகவதியைச் சாப்பிடக் கூப்பிட்டாள். அப்