பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

தும்பைப் பூ


இந்தக் குறுகுறுப்பு நாளுக்கு நாள் அதிகமாய்க் கொண்டிருந்ததே யொழிய, குறைந்தபாடில்லை. பாலன் கணேசனின் வெள்ளைப் பேச்சினால் அவளுக்கு உண்டான சந்தேகம் வேகமாக வளர்ந்து கொண்டே போயிற்று. சந்தேகக் கண்ணோடேயே, மங்கையர்க்கரசியின் ஒவ்வொரு சிறு செயலையும் அவள் கவனித்து வரலானாள். மங்கை பேசும் சாதாரணப் பேச்சிலும், சிரிப்பிலும் செய்யும் செயலிலும் கூட ஏதோ வஞ்சகம் இருப்பதாகவும், களங்கம் இருப்பதாகவும் அவள் ஊகிக்கலானாள். இவளாகப் பலமுறை வற்புறுத்திச் சொன்னபடி, மங்கை துணிமணிகளை அணிந்து கொண்டது. இப்போது இவளுக்கு வித்தியாசமான அர்த்தத்தைக் கற்பித்தது. மங்கை இவள் கணவனுக்குப் பணிவிடை செய்யும் போதும் மறைவிலிருந்து கவனிக்கலானாள் அவர் கேட்பதற்கு மங்கை பதில் சொல்வதை இவள் ஒற்றுக் கேட்கலானாள்.

காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சளாய் இருப்பதுபோல் சந்தேகத்தால் பீடிக்கப்பட்ட திலகவதியின் கண்களுக்கு மங்கை ஒரு மாய்மாலக்காரியாய்க் காணப்பட்டாள். தன் கணவனுக்கும் மங்கைக்கும் இடையே கள்ள நட்பு ஏற்பட்டிருப்பதாக அவள் தீர்மானித்து விட்டாள்.

‘சே! அப்படியிருக்குமா? அவர் அப்படிப்பட்ட வரல்லவே?’

‘ஆம். பிள்ளைகள் என்ன செய்வார்கள்? பெண்கள் மேல் விழுந்துபோனால் மங்கை அவரை மயக்கி விட்டிருப்பாள்.’

‘அவள்தான் மானங்கெட்டுக் கையைப் பிடித்தாலும் பிள்ளை குட்டி பெற்ற இந்த மனுஷனுக்குப் புத்தி எங்கே போச்சு?’

‘மங்கை இவ்வளவுக்குத் துணிந்திருப்பாளா? அவர் முன்னே போகவே கூச்சப்படுவாளாயிற்றே! நானாகப் பலமுறை சொல்லியனுப்பிலுைம் நாணங்கொண்டு நிற்பவளாயிற்றே!’