பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தும்பைப் பூ

83


திலகவதிக்கும்தான் திராத சிந்தனை உண்டாயிற்று’ அன்று அவள் மங்கைமீது வெகுண்டு விழுந்ததை நினைத்து வெகுவாக வருத்தப்பட்டாள். ‘ஐயோ, நாம் அவளை ஏன் அப்படிக் கடிந்து கொண்டோம்? அவள் என்னசெய்தாள்?...’

‘என்ன செய்தாளா நம் குடியையல்லவா கெடுக்கப் பார்க்கிறாள்? நம் வாழ்க்கையை யல்லவா பறித்துக் கொள்ளப் பார்க்கிறாள்? இதைவிட வேறென்ன செய்ய வேண்டும்? அவரைக் கைக்குள் போட்டுக் கொள்ள இவள் வசியமல்லவா செய்வதாகத் தெரிகிறது?...’

‘சே! அப்படியிருக்காது. மங்கை அப்படிப்பட்டவளல்லவே! சரியாக உண்ணாமலும் உயிர் வாழ்வதிலே சிறிதும் பற்றில்லாமலும் தவசி போலிருக்கும் அவளா இப்படிச் சிற்றின்பம் நாடிச் சதி செய்வாள்?’

‘.......இதெல்லாம் வெளி வேடம்! பட்டிக்காட்டிலே இருந்து வந்த சமயத்தில் அப்படிப் பசப்பினாள்? பட்டணத்துத் தண்ணீர் உடம்பில் ஊறினதும் சினிமாக்காரி போல் சிங்காரித்துக் கொண்டு தளுக்கிக் குலுக்கி நடக் கிருளே! இப்போது அவள் அறுதலியாகவா இருக்கிறாள்?...’

திலகவதியின் உள்ளத்திலே இப்படி மாறி மாறிப் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. அவள் வீட்டு விலக்கமாயிருந்தபோது, ‘சித்தி கண்ணிலே விழுந்த துசை அப்பா துடைத்தார்’ என்று கணேசன் சொல்லிய தகவல் அவளுடைய கள்ளமில்லாத உள்ளத்தை மிகவும் கலக்கிவிட்டது. அப்போது அவளுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியே ‘என்ன!’ என்று ஆத்திரம் பொங்கும் கேள்வியாக வெளிவந்தது.

இது கண்டு கணேசன் பயந்து போய், ‘இல்லேம்மா! சித்தி கண்ணிலே விழுந்த தூசை அக்காதான் ஊதி எடுத்துச்சி’ என்று திருத்திச் சொல்லியபோது, ‘ஓ! அப்படியா!’ எனச் சிறிது தணிந்து கூறினாலும் உள்ளத்தை மட்டும் அவ்வெண்ணம், குடைந்து கொண்டேயிருந்தது,