பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

தும்பைப் பூ

சாப்பிடாமலும், உறங்க வேண்டிய நேரங்களில் உறங்காமலும் பந்தாட்ட விஷயங்களிலும் அரசியல் விஷயங்களிலும் ஆர்வங் காட்டி அதிகக் கவனஞ் செலுத்தி வருவதைக் கண்டு, ‘விளையாட்டு விஷயங்களில் கலந்து கொள்வது நல்லதுதான். ஆனால் வீண் விவகாரங்களில் கவனஞ் செலுத்தக் கூடாது. ஊணும் உறக்கமும் வேளா வேளைக்கு இல்லாவிட்டால், உடம்பு கெட்டுவிடும்’ என்று பரிவோடு சொல்லிக் குறிப்பிட்ட வேளையில் சாப்பிடவும் தூங்கவும் வைத்தால், ‘உபசாரம் செய்கிறாளாம். உபசாரம்; வெற்று உபசாரம் செய்து, பிள்ளைகளைச் சாப்பாட்டு ராமன்களாகவும், தூங்கு மூஞ்சிகளாகவும் ஆக்கப் பார்க்கிறாள். இவளுக்கென்ன?’ என்றும், ‘பெற்ற எனக்கில்லாத கனிகரம் உனக்கு வந்து விட்டதா?’ என்றும் ஏளனமாகக் கேட்கிறாள். இருந்தாற் போலிருந்து அக்கா ஏன் இப்படி மாறிவிட்டாள்?

“என்னைக் கண்டால் ஏன் அவளுக்குப் பிடிக்கவில்லை? நான் செய்த தவறு என்ன? என் மனமறிந்து நான் யாதொரு பிழையையும் செய்யவில்லையே!... என்மீது அக்கா எவ்வளவு அன்பாக இருந்தாள்? இப்போது எப்படி வேம்பாகி விட்டாள்? நான் நல்ல புடவைகளையும் நகைகளையும் போட்டுக்கொண்டு சந்தோஷமாக இருக்க வேண்டுமென்று வற்புறுத்தி வந்தவள், இப்போது மினுக்கிக் குலுக்குகிறேன் என்றல்லவா பழிக்கிறாள்? அத்தான் என்னை அடிக்கடி கூப்பிட்டுப் பேசுவதையும், வேலையிடுவதையும் அவள் விரும்பவில்லையா? ஒரு வேளை அத்தான் அந்தரங்கமாக என் மீது பரிவு காட்டிப் பேசி ஆறுதல் கூறி வருவது அவளுக்குத் தெரிந்து விட்டதோ! அவள் தப்பபிப்பிராயம் கொண்டிருக்கக் கூடுமோ! அதைக் காரணமாகக் கொண்டுதான் என்மீது கோபங்கொண்டு எடுத்ததற் கெல்லாம் குற்றஞ் சாட்டிப் பேசுகிறாளா? என்னவென்றே புரியவில்லையே! ஐயோ! கடவுளே! கவலையில்லாமல் காலந் தள்ளக் கடைசியாக ஒரு ஆதரவான இடம் கிடைத்தது என்று கருதியிருந்தேன்! அதுவும் உனக்குப் பொறுக்க வில்லையா?” என்று எல்லாம் எண்ணி மனம் பொருமினாள் மங்கையர்க்கரசி.