பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தும்பைப் பூ

81

மங்கையர்க்கரசிக் குண்டான துக்கம் சொல்லிமுடியாது. அவள் திலகவதி சொல்லிய ஒவ்வொரு சொல்லையும் நினைத்து நினைத்து மனவேதனைப் பட்டாள். ‘அக்காவா இப்படி எல்லாம் என்னைப் பேசினாள்? என்னிடம் அன்பும் ஆதரவும் அளவில்லாமல் காட்டி வந்த அக்காவா―உடன் பிறந்த சகோதரியைவிட உயர்வாக மதித்து வந்த அக்காவா, உயிருக்கு உயிராக நேசித்துவந்த அக்காவா இப்படி இழிவாகப் பழித்துப் பேசினாள்? அவள் இவ்விதம் ஏசிப் பேசுவதற்குக் காரணம் என்ன? அவள் இவ்விதம் ஆத்திரங் கொண்டு திட்டுவதற்கு நான் செய்த குற்றம் என்ன? என் மனமறிந்து ஒரு குற்றமும் செய்யவில்லையே? பிழை இழைக்கவில்லையே? அப்படி நான் ஏதேனும் செய்திருந்தாலும் ஏன் இப்படிச் செய்தாய் என்று நேரடியாகக் கேட்டுக் கண்டிக்கலாமே! அதை விட்டு மனதில் ஏதோ வைத்துக்கொண்டு மறைமுகமாக வைவானேன்! பிள்ளைகள் முன் வைத்து என்னைப் பேசியதோடல்லாமல் அவர்களையுமல்லவா அநியாயமாகக் கடிந்து கொண்டாள்?......’ என்றெல்லாம் எண்ணி அவள் ஏங்கினாள்.

சில காலமாகவே, அக்கா என்னைக் கண்டால் சீறி விழுகிறாள். ஒன்றுமில்லாத விஷயத்துக்குக்கூட மூச்சுப் பிடித்துக்கொண்டு ஒரு மணி நேரம் ஓயாமல் பேசுகிறாள். கணேசனும் கோகிலாவும் விளையாட்டுப்புத்தியால் ஏதேனும் விஷமம் செய்வதையும் தவறு புரிவதையும் பார்த்து, ‘இவ்விதம் செய்வது குற்றம். இனி அம்மாதிரி செய்யக் கூடாது’ என்று புத்தி கூறி நான் அன்பாகக் கடிந்து கொள்வதைக்கூட அக்கா குற்றமாக எடுத்துக் கொண்டு அவர்கள் என்ன செய்தார்கள் என்று இப்படிச் சத்தம் போடுகிறாய்? சின்னப் பிள்ளைகளாயிருந்தால் விஷமம் சில பண்ணத்தான் செய்வார்கள். இதற்குப் போய் சும்மா அதிகாரம் பண்ணுகிறாயே! என்று ஆத்திரத்தோடு கூறி ஆர்ப்பரிக்கிறாள். சிவகுமாரனும், விசுவநாதனும் இளமைத் துடிப்பால் விடுமுறை நாட்களில் சாப்பிட வேண்டிய நேரங்களில்