பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

தும்பைப் பூ

உள்ளறைக்கு மெல்லப் போகலனான். கண்களிலிருந்து பொங்கி வழிந்து கொண்டிருந்த நீரைத் தடுக்க மாட்டாதவளாய்ச் செயலற்று நின்றிருந்த மங்கை, அத்தான் தன்னைக் கூப்பிட்டுக் கொண்டு வருவதை யறிந்ததும் பரபரப்பாக முந்தானையால் கண்களைத் துடைத்துக் கொள்ளலானாள். பின் அவர் என்ன விஷயம் என்று கேட்கத் தொடங்கியதுமே சடக்கெனச் சமையலறைக்குப் போய்விட்டாள். பற்றுக் கோடில்லாது துவளும் பைங்கொடி போல் கணேசன் துவண்டு நின்றுவிட்டான்.

திலகவதி கணவன் கேள்விகளுக்கு ஒன்றும் பதில் சொல்லவில்லை. கழுத்தை ஒருவிதமாகச் சொடுக்கிக் கொண்டு போய் அவருக்கு உணவு படைக்கலானாள். சதானந்தம் பிள்ளைக்கு ஒன்றுமே புரியவில்லை. ஏதோ நடந்திருக்கிறது என்று மட்டும் அங்கு காணப்பட்ட விசித்திரமான சூழ்நிலையிலிருந்து ஊகித்து உணர்ந்தார். மனைவியின் குணம், போக்கை அனுசரித்துப் போகக் கூடியவராதலால், அவள் மெளனஞ் சாதித்துக் கொண்டிருக்கையில், வாயைக் கிளறினால் வம்புதான் வளரும் என்று கருதி அவர் வாளா இருந்து விட்டார். அவர் சாப்பிட்டுவிட்டுக் கோர்ட்டுக்குப் போகும் போதுகூட திலகவதி வாய் திறக்கவேயில்லை. சிறிது காலமாகவே தம் மனைவியின் போக்கு ஒரு தினுசாகப் போய்க் கொண்டிருப்பதைப் பற்றிப் பிள்ளையவர்கள் சிந்தித்துக் கொண்டே போகலனார். அடிக்கடி எடுத்ததற்கெல்லாம் கோபங் கொள்வது, அனாவசியமான விஷயங்களுக்கெல்லாம் மூச்சைப் பிடித்துக்கொண்டு பேசி வாதாடுவது, முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு மெளனம் சாதிப்பது போன்ற செயல்கள் திலகவதியிடம் காணப்படுவதற்குக் காரணமென்ன? நோயினால் பாதிக்கப்பட்டுள்ள உடல் பலவீனங் காரணமா? அல்லது பிணியினால் உடம்பு நலிந்துள்ளதுபோல உள்ளமும் நொந்துள்ளதால் இவ்வித மாறுதல் ஏற்பட்டிருக்கிறதோ? என்றெல்லாம் அவர் வழி நெடுக யோசித்தவாறே சென்றார்.