பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தும்பைப் பூ

79

தால், கோகிலா வியப்பும் வருத்தமும் ஒருங்கேகொண்டாள். ‘பணிப் பெண்ணைச்கூடக் கடிந்து பேசமாட்டாளே, அம்மா! சித்தியைப் போய் ஏன் இப்படிக் கோபித்துக் கொள்கிறாள்’ என்று அவள் பிஞ்சுள்ளம் பல எண்ணி வேதனைப்பட்டது. சிறிது தூர நின்றிருந்த அவள் மங்கைக்கு ஜாடை காட்டித் தாயின் எதிரிலிருந்து அப்புறம் வந்து விடுமாறு சொன்னான். ஆனால் மங்கை தலை கவிழ்ந்து கொண்டிருந்ததால் இக் குறிப்பைக் கவனிக்கவில்லை.

திலகவதி ஆத்திரம் அடங்காதவளாய், “பெரியவர்களுக்கே யோசனையில்லாதபோது. சிறுசுகளுக்கு எங்கே புத்தியிருக்கப் போகிறது? அப்பாவே எதற்கெடுத்தாலும் மங்கை மங்கை என்று வாய் ஒயாது கூப்பிட்டு வளைய வருகிறார் என்றால் அதைப் பார்த்த பிள்ளைகள் பிதற்றுவதற்குக் கேட்கவா வேண்டும்? அவருக்கு வயசு ஆச்சு என்று தான் பேரு.....” என்று பேசிக்கொண்டே போனாள்.

இத்தருணத்தில், ‘மங்கை, சாப்பாடு ஆயிட்டுதோ இல்லையோ! இலை போடு. நான் இன்றைக்குச் சீக்கிரமாகக் கோர்ட்டுக்குப் போகணும்’ என்று கூறிக்கொண்டே உள்ளே வந்த சதானந்தம் பிள்ளை அங்கு நிலவும் சூழ்நிலையைக் கவனியாமல், “ஏன், சிவா! விசுவம்! உங்களுக்கு மணியாகவில்லையா? இன்னம் இருக்கிறீர்களே! திலகம்! இவர்களுக்குச் சாப்பாடு போடவில்லை?” என்று பிள்ளைகளைப் பார்த்து விட்டு மனைவியைக் கேட்டார்.

தம் கேள்விகளுக்குப் பதில் ஒன்றும் வராததால் அவர் எல்லோர் முகங்களையும் சுற்றிப் பார்த்துக் கொண்டே, “என்ன சமாசாரம்? ஏன் இப்படி நிற்கிறீர்கள் எல்லோரும்?” என்று கேட்கலானார்.

“ஒன்றுமில்லை, அப்பா! இதோ போகிறோம்” என்று சொல்லியவாறே சிவகுமாரன் புத்தகங்களை எடுத்துக் கொண்டு வெளியே நடந்தான். விசுவம் அவனைப் பின் தொடர்ந்தான். கோகிலா ஏதோ எடுப்பதுபோல்,