பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தும்பைப் பூ

89

அவள் கூறி முடிக்கு முன்பே, “இப்போது திடீரென என்ன ஊருக்குப் போக வேண்டுமென்ற நினைவு?” எனக் கேட்ட திலகவதி இடையில் ஏதோ எண்ணமுண்டாகவே, “ஓ! நீ இருந்தாற்போலிருந்து ஊருக்குப் போக வேண்டுமென்று சொல்வதன் காரணம் இப்போது தெரிகிறது? பிகு பண்ணுகிறீஆய்? நீ இல்லாவிட்டால் இங்கு ஒரு காரியமும் நடக்காது என்று உன் நினைப்பு; இல்லையா? அதுதானே?” என்று கோபம் கொதித்து எழக் கேட்டாள்.

மங்கை தலையைக் கவிழ்த்துக் கொண்டாள்.

“ஊருக்குப் போக வேண்டுமென்றால், மகராஜியாப் போ நான் வேண்டாமென்று சொல்லவில்லை” என்று கூறிய திலகவதி, ‘நீ போகாதே, அம்மா! இரு’ என உன்னை வேண்டுவேன் என்று மட்டும் நினைக்காதே, மங்கை!......ஆமாம்.”

மங்கை கண்ணீர் சிந்தியவாறே காரியத்தைப் பார்க்கலானாள்.

“இன்னுமா அம்மா உங்களுடைய தகராறு முடியவில்லை” எனக் கேட்டுக்கொண்டே விசுவநாதன் வந்தான். வழக்கத்துக்கு மாறாக அவன் அன்று முன்னதாக வந்துவிட்டான்.

அவனைப் பின் தொடர்ந்தாற்போல் கோகிலாவும் கணேசனும் வந்தனர். கணேசன் வந்ததும் வராததுமாக “சித்தி! பட்சணம் கொடு முன்னே; எனக்குப் பசிக்குது” என்று கேட்டுக்கொண்டே மங்கையின் கால்களைக் கட்டிக் கொண்டான்.

கோகிலா திலகவதியின் முந்தானையைப் பிடித்து நெருடியவாறு, “என்ன அம்மா, நீ! சித்தியண்டை போய் சும்மா சண்டை பிடிக்கிறாய்?...” என்று மெதுவாகச் சொன்னாள்.

“அம்மாவுக்குக் குணம் கெட்டுப் போச்சு. கோகிலா! வயசாகிவிட்டதோ இல்லையோ! அதுதான் முசுடாகி...”
து ― 6