பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தும்பைப் பூ

91

என நினைத்திருக்கிறீர்களா? என்ன! நான்தான் ஏதோ தப்பாக நடந்துகொள்கிற மாதிரி எண்ணி அந்தச் சிறுக்கிக்குப் பரிந்து பேசுகிறீர்கள். அவ்வளவு தூரம் சொக்குப்பொடி போட்டு அவள் உங்களையெல்லாம் மயக்கி வைத்திருக்கிறாள்...” என்று இரைந்தாள்.

அன்னையின் ஆர்ப்பாட்டத்தைக் கண்டு கோகிலா அசந்து போய்விட்டாள். ‘இதோ வெளி வருகிறேன் பார்’ என்பது போல் கண்ணீர் அவளுடைய விழிகளிலே மிதந்தது.

“எனக்காக நீங்களெல்லாம் ஏன் அம்மா, பேச்சு வாங்குகிறீர்கள்? துஷ்டியால் உங்கள் அனைவருக்கும் இந்தத் துன்பம் நீ போ, கோகிலா!” என்று இரக்கத்துடன் அவள் தோளைப், பற்றிச் சொல்லி அவ்விடத்தைவிட்டுப் போகச் செய்தான் மங்கை.

பின் அவள் அருவிபோல் வழிந்துவரும் கண்ணீரை முந்தானையால் துடைத்துக்கொண்டே, அடுக்களை நோக்கி அவசரமாகப் போனாள்.

ஆவேசம் வந்தவள்போல் மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்க நின்றிருந்த திலகவதி, போகும் மங்கையைக் கண்ணால் சுட்டு எரித்து விடுபவள் மாதிரி வெறித்துப் பார்த்துவிட்டுத் திரும்பினாள். உரத்துச் சில வார்த்தைகள் பேசிய சிறிது நேரத்தில் அவள் மிகவும் களைத்துப் போய்விட்டாள். அவளுடைய முகமும் உடம்பும் குபிரென்று வியர்த்துவிட்டிருந்தது. ஆதலால் தன் சேலைத் தலைப்பால் முகத்தையும் கைகளையும் துடைத்துக் கொண்டே, சிரமத்தோடு கூடத்துக்குப் போய் உட்கார்ந்து, ‘அப்பாடா!’ என்று கூறியவாறு ஒரு தூணில் சாய்ந்துவிட்டாள்.

இதுவரை பக்கத்து அறை வாயிலண்டை இருந்து அன்னை செய்யும் தர்பாரைக் கவனித்துக் கொண்டிருந்த விசுவநாதன், அவள் அவ்வழியாக வருவது அறிந்ததும் அறைக்குள் விரைந்து போய் ஏதோ புத்தகத்தை எடுத்துப் புரட்டிக் கொண்டிருப்பதுபோல் பாவனை செய்யலானான்.