பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

தும்பைப் பூ


பிள்ளைகளுக்கெல்லாம் பட்சணம் கொடுப்பதற்கு முன் மங்கை திலகவதிக்குப் பலகாரத்தைக் கொண்டு போய்க் கொடுத்தாள். அவள் அலுத்துப் போயிருப்பதை நன்கு உணர்ந்த மங்கை காபியைக் கொடுக்காமல் ஹார்லிக்ஸைக் கலக்கித் தந்தாள். இவ்வளவு கனிகரத்துடன் அவள் கவனித்துச் செய்தும் திலகவதி, “வைத்துவிட்டுப் போ; இப்படி” என்று வேண்டா வெறுப்பாகச் சொன்னாள்.

“ஆறிவிடப் போகிறது. சூடாகச் சாப்பிடுங்கள்” எனப் பயபக்தியோடு மெல்லக் கூறினாள் மங்கை.

“எனக்குத் தெரியும், நீ செய்ய வேண்டியதைச் செய்து விட்டாயோ, இல்லையோ! போய் உன் வேலையைப் பார்” என்று வெடுவெடுப்புடன் சொன்னாள் திலகவதி.

மங்கை பேசாமல் அவ்விடத்தை விட்டு அகன்று பிள்ளைகளுடைய வேலையைக் கவனிக்கலானாள்.

படுசுட்டி கணேசன் முகத்தில்கூடக் கலகலப்பில்லை. எல்லோரும் மெளனமாக இருந்து சிற்றுண்டி சாப்பிட்டு விட்டு எழுந்து போயினர்.

குழாயில் கையைக் கழுவிக்கொண்டு திரும்பிய சிவகுமாரன், பற்றுப் பாத்திரங்களே எடுத்து வந்து அலம்ப வந்த மங்கையைப் பார்த்து, “சித்தி, மனதில் ஒன்றும் வைத்துக்கொண்டு வருந்தாதீர்கள். தம்பி சொன்னன் வந்ததும். காலையில் நடந்த பாரதம் சாயங்காலமும் தொடர்ந்து நடக்கும் என்று எண்ணவில்லை. அம்மாவுக்கு என்னவோ தெரியவில்லை. அவர்கள் எப்போதும் இப்படி இருந்ததில்லை......” என்று அனுதாபத்தோடு சொன்னான்.

“என் துரதிஷ்டம் அப்படி, சிவா இதற்கு யாரை நோவது!...” என்று மங்கை தழுதழுத்த குரலில் சொன்னான்.

“அதெல்லாம் ஒன்றுமில்லை சித்தி! இன்றைக்கு என்னமோ கிரஹணம் மாதிரி.....” என்று சொல்லிக்