பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தும்பைப் பூ

93

கொண்டு திரும்பினவன் ஏதோ நினைத்துக் கொண்டவனாய், “ஆமாம், சித்தி! இருந்தாற் போலிருந்து அம்மா ஏன் இப்படி எரிந்து விழுகிறார்கள்? நீங்கள் ஏதாயினும்......” என வர்த்தையை முடிக்காமலே கேட்டு நிறுத்தினான்.

இக்கேள்வி மங்கையின் உள்ளத்தில் சுருக்கெனத் தைத்தது. “நான் ஒன்றும் செய்யவில்லை. அம்மாதான்......” என்ன சொல்கிறோமென்று நினைக்காமல் படபடவெனப் பதில் சொன்னாள்.

“அப்படியா!” என மொழிந்தவாறே, யோசனையோடு நடந்து சென்றான் சிவகுமாரன்.

மாதா கோவில் மணி ஆறு அடிக்கலாயிற்று. நன்றாக இருட்டுவதற்குள்ளாகவே, மங்கை முதன் முதலாகப் பூசையறையில் தூங்காமணி விளக்குக்கு எண்ணெய் ஊற்றி நன்றாகத் தூண்டிவிட்டுப் பின் பக்கத்திலிருக்கும் விளக்குகளைப் பொருந்தினாள். பிள்ளையாருக்கும், நடராஜாவுக்கும் ஒரு கும்பிடு போட்டு விழுந்து வணங்கிவிட்டு எழுந்தாள். அவளுடைய நா ஏதோ உச்சரித்துக் கொண்டிருந்தது. கண்கள் பனித்திருந்தன. சில விநாடிகள் தியானத்துக்குப் பின் அவள் பூசையறையை விட்டு வெளியேறி மற்ற இடங்களில் மின்சார விளக்குகளை ஏற்றினாள். கோகிலாவும் அவளுக்கு உதவி செய்தாள். வெளியே விளையாடிக் கொண்டிருந்த கணேசன் விளக்கு வைத்ததுமே வீட்டுக்குள் வந்து புத்தகங்களை எடுத்து வைத்துக்கொண்டு படிக்கலானான். கோகிலாவும் மற்றொரு பக்கம் அமர்ந்து வாசித்துக் கொண்டிருந்தாள்.

மங்கை அவசர அவசரமாகச் சமையல் வேலை செய்து கொண்டிருந்தாள். பொழுது போனது தெரியாமல் திலகவதி உன்மத்தம் பிடித்தவள்போல் உட்கார்ந்து கொண்டிருந்தாள். வெளியே எங்கே போவதாயிருந்தாலும் கோர்ட்டிலிருந்து நேராக வீட்டுக்கு வந்து விட்டே போகும் பழக்கமுடைய சதானந்தம் பிள்ளை அன்று வெகு நேரமாகியும் வரவில்லை.ஆ