பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தும்பைப் பூ

95

சொல்லியிருக்கப் படாதா?” என்று சொல்வதற்குள் குமாஸ்தா திரும்பிப் போய்விட்டார்.

பந்தாடிவிட்டு வந்த விசுவநாதனும் சிவகுமாரனும் தத்தம் இடத்திலமர்ந்து படிக்கலாயினர்.

‘ஐயோ, இன்றைக்குப் பார்த்து அத்தான் காலதாமதமாக வரப் போகிறாரே! மணியாய் விட்டால்...?’ மங்கை நிலைகொள்ளாமல் கூடத்துக்கும் சமையல் உள்ளுக்குமாகப் போய் வந்து கொண்டிருந்தாள். அவள் சமையல் வேலையை முடித்து வெகு நேரமாயிற்று. பிள்ளைகளுக்கு முன் திலகவதியைச் சாப்பிடக் கூப்பிடலாம் என்றாலோ அவள் என்ன சொல்வாளோ என்ற பயத்தால் மங்கை மெளனமாயிருந்தாள்.

‘டாண்’ என்று மணியடித்து, கடியாரம் ஏழரையானதைக் காட்டியது. நிமிர்ந்து பார்த்த மங்கை திடீரென நினைத்துக் கொண்டு தன் உடைகளை யெல்லாம் எடுத்து மூட்டை கட்டலானாள்.

“என்ன மூட்டை கட்டுகிறீர்கள்? சித்தி! எங்காயினும் ஊர்ப் பிரயாணமா? என்ன!”

விசுவநாதனின் கலகலவென்ற சிரிப்புப் பேச்சு மங்கையை விதிர்ப்புற வைத்தது. பின் தன்னைச் சுதாரித்துக் கொண்டு, “ஆமாம்: விசுவம்! ஊருக்குத்தான்......” என்று சிரிப்பைச் சிரமப்பட்டு வருவித்துக்கொண்டு சொன்னாள்.

“என்ன விளையாடுகிறீர்களா? சித்தி!” என்று திகைப்புடன் கேட்ட விசுவநாதன், “வண்ணானுக்குப் போட அழுக்குத் துணிகளே மூட்டை கட்டுவது எனக்குத் தெரியாதா? நான் வேடிக்கைக்காக இப்படிக் கேட்டால், உடனே ஒரே போடு போடுகிறீர்களே!” என்று தன்னைச் சமாளித்துக் கொண்டு சொன்னான்.

“இல்லை, விசுவம்! நான் ஊருக்குத்தான் பயணப்படுகிறேன். மூட்டையைப் பார்; அழுக்குத் துணிகளா இருக்கிதென்று. உன்னிடம்கூட விளையாடுவேனா....”