பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

தும்பைப் பூ


“நீங்க சொல்வது உண்மையா? சித்தி......”

“நிசமாகத்தான் சொல்கிறேன், விசுவம்.”

“இப்ப என்ன ஊருக்கு? அம்மா இன்றைக்கு ஏதோ சத்தம் போட்டார்களே; அதற்காகவா கோபித்துக்கொண்டு போகிறீர்கள், சித்தி?”

“சே! அதற்கில்லை; விசுவம். முன்னமே ஊருக்குப் போக வேண்டுமென்று தீர்மானித்தேன். போய்விட்டு......”

“என்னமோ, சித்தி! நீங்க இந்தச் சமயத்தில் போவது, அவ்வளவு நன்றாயில்லை...”

தற்செயலாக அப்பக்கம் வந்த திலகவதி இவர்களுடைய உரையாடலே ஒற்றுக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

“நீ வேறு விதமாக நினைக்காதே, விசுவம்! சாதாரணமாகத்தான்.....”

“என்ன, மகனும், சித்தியுமாக மந்திராலோசனையில் ஆழ்ந்திருக்கிருப் போலிருக்கு? அதுதான் கூப்பிடக் கூப்பிட மங்கைக்குக் காது கேட்கவில்லை......” என்று புன்சிரிப்புடன் கூறிக்கொண்டே அங்கு வந்தார் சதானந்தம் பிள்ளை. அவரைப் பின் தொடர்ந்தாற் போல் வந்த கோகிலா, “உங்களுக்குச் சங்கதி தெரியாதா, அப்பா......ஊம், சித்தியிடத்திலே அம்......”

விசுவநாதன் உதட்டின்மீது விரலை வைத்து அவ்விஷயத்தைச் சொல்ல வேண்டாம் என்று குறிப்புக் காட்டவே, கோகிலா அப்படியே பேச்சை நிறுத்திவிட்டாள்.

காலையில் நிகழ்ந்த சம்பவத்தை, வெளியே போய் எத்தனையோ, விவகாரங்களைக் கவனித்தும் மறவாதிருந்த பிள்ளையவர்கள் வந்துமே மங்கை மகிழ்ச்சியாய் இருக்கிறாளா? வருத்தமாயிருக்கிறாளா? என்று கவனிக்கலானார். அக்கவனத்தில் அவருக்குக் கோகிலாவின் பேச்சும் காதில் விழவில்லை. விசுவநாதனின் சைசையும் தெரியவில்லை.