பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

தும்பைப் பூ


சதானந்தம் பிள்ளை, “திலகம், இதென்ன! ஒன்றுமில்லாததற்கு இப்படி களேபரம் பண்ணி ஊரை இரண்டாக்குகிறாய் மங்கை உனக்கு வைரியா, என்ன?....” என்று உணர்ச்சியை அடக்கமாட்டாமல் கேட்டார்.

திலகவதி, “அவள்தான் எனக்கு வைரியாகி எத்தனையோ நாளாகிவிட்டதே! இனிமேலா ஆக வேண்டும்? உங்களுக்கு வேண்டுமானல் உறவாயிருக்கட்டும், நீங்கள் அவளுடன் குலாவுங்கள்; உங்கள் பிள்ளைகள் குலாவட்டும். நான் வேண்டாம் என்று சொல்லவில்லை....?”

“திலகம், நீ பேசாமலிருக்க மாட்டாய்... ...” என்று இரைந்தார் பிள்ளையவர்கள். அவர் பொறுமையை இழந்து விட்டார்.

“அவள் எனக்கு வைரியாகி எத்தனையோ நாளாகி விட்டதே!” என்ற வார்த்தையைக் கேட்டதுமே மங்கை, “ஐயோ!” என்று ஆற்றாமையால் அலறினாள். விஷயம் வெகு தூரத்துக்குப் போய் விட்டது. அக்கா தன் மீது என்ன காரணத்தாலோ அளவில்லாத அசூயையும் வெறுப்பும் கொண்டுவிட்டாள். இனி ஒரு கணம் தங்குவது மரியாதையல்ல” என்று தீர்மானித்த அவள் அக்கணமே புறப்படக் கருதி, “அத்தான், அக்காவைக் கோபிக்காதீர்கள். அவர்கள்மீது எவ்விதத் தப்புமில்லை. என் மீதுதான் தவறு. என்னால் உங்களுக்குள் சண்டை வேண்டாம் நான் போகிறேன். எனக்கு விடை கொடுங்கள்.... ” என்று கூறிய வாறே மூட்டையைக் கையில் எடுத்தாள்.

“எங்கே போகப் போகிறாய்?” எனப் பதற்றத்துடன் கேட்டார் பிள்ளையவர்கள்.

“ஊருக்குத்தான், அத்தான்.”

“அவசரப்படாதீர்கள், சித்தி!” என்று கூறித் தடுத்தான் விசுவம்.