பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தும்பைப்பூ

99


"போகாதீர்கள், சித்தி" என்று அழுது கொண்டே கூறிய கோகிலா மங்கையின் கையிலிருந்த மூட்டையைத் தான் வாங்கிக் கொள்ள முயன்றாள்.

"என்னை இப்போது தடுக்காதீர்கள்......." என்று விசுவத்தையும், கோகிலாவையும் விநயமாகக் கேட்டுக் கொண்டாள் மங்கை.

"அட! இவர்கள் வேண்டுவதும், அவள் பிகு பண்ணுவதும் பார்க்க வேடிக்கையாகத்தான் இருக்கிறது. வீட்டு இளக்காரம் வண்ணானுக்குத்தான் தெரியும் என்ற கதை போல இந்த வீட்டு எசமானின் ஏமாளித்தனத்தையறிந்து சிறுக்கி ஏய்க்கிறாள்" என்று ஏளனமாகப் பேசிய திலகவதி, "போயேன் கழுதை! உன்னை யார் இரு, இரு என்கிறது. நாடகம் நடிக்கிறாயே!...." என வெறுப்போடு சொன்னாள்.

"போகிறேன், அக்கா! நீ சொன்னாலும் நான் இனி இருக்கமாட்டேன்" என்றாள் மங்கை.

"இப்போது என்ன அவசரம்? நாளை, அல்லது நாளை மறுநாள் போனால் போகிறது" என்றார் பிள்ளையவர்கள்.

"அத்தான், உங்கள் பேச்சை மீறி நடப்பதாக எண்ணக் கூடாது. நான் அவசியம் போய்த்தான் ஆகவேண்டும்-" என்று சொன்னாள் மங்கை. அவள் பேச்சில் கண்டிப்பு தொனித்தது.

தன்னை ஏக்கத்துடன் பார்த்த பிள்ளைகளைப் பார்த்து, "சீக்கிரம் திரும்பி வந்துவிடுவேன், கோகிலா!" என்று ஆறுதல் கூறினாள்.

"உன்னை யாரும் திரும்பி வரும்படி வேண்டவில்லை. நீ வர வேண்டாம்" என்று கர்ஜித்தாள் திலகவதி.

"வரமாட்டேன்; அக்கா! நீங்க பயப்படாதீர்கள்; குழந்தைகளை ஆறுதல் படுத்த அப்படிச் சொன்னேனே யொழிய, மறுபடியும் இங்கு வரும் எண்ணம் எனக்குக்