பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வீரன் குமரன்

காந்தியடிகள் தோற்றுவித்த சாத்விகப்போர் எத்தனையோ பேரை வீரர்களாகவும் தியாகிகளாகவும் செய்தது. அப்போரில் பங்குகொண்டு உயிர்த்தியாகம் செய்தவர்களில் திருப்பூர்க் குமரனும் ஒருவர். அந்தத் தியாக வரலாறு இங்கு கூறப்படு கிறது.

"அன்பின் வடிவமாம் அன்னையே-உன்றன்
அடிமலர் வாழ்த்தி வணங்கினேன்;
இன்பமு டன்விடை நல்குவாய்-நானும்
என்பணி தேசத்திற் காற்றுவேன்"

என்று குமரன் பணிந்திடத்-தாயும்
இளநகை செய்துரை யாடுவாள்:
"நன்றுகு றித்தனை மைந்தநீ-வளம்
நாடும் திருப்பூரின் செல்வமாம்;

சாத்விகப் போரெனில் தைரியம்-நெஞ்சில்
சாலவும் வேண்டும்நீ கொண்டுளாய்;
ஆத்மிக சக்தியும் அன்பறம்-வெல்ல
ஆருயிர் ஈந்தும் கடன்செய்வாய்:

தேடற் கரிய மகாத்மாவை-இந்தத்
தேசத் தலைவராய்ப் பெற்றுளோம்;
பாடற் கரிய தமிழ்மகன்-புகழ்
பாரெங்கும் வீசிடச் செல்லுவாய்.”

128