பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பொங்கல்


 பொங்கல் புதுநாள் வந்தது.பார்-எங்கும்
         பொங்குக அன்பறம் இன்பமுமே !
 இங்கெமை வருத்திய துன்பமெல்லாம்-இன்றே
         ஏகிட இறைவனைத் தொழுதிடுவோம்

 பொங்கொளி ஞாயிறும் எழுந்தனனே-அவன்
         பொலிவினில் மாய்ந்திடும் பணிபோல
 தங்கிய குறைகளும் சிறுமைகளும்-தலை
         சாய்ந்தினி ஓடிடும் நிச்சயமே

 செந்நெலும் கரும்பும் விளைந்தனவே-நல்ல
         தேன்பொழி மலர்களும் விரிந்தனவே
 இன்னலும் பசியும் போயொழிக-தேசம்
        எழிலுடன் கூடியே நலமுறுக

 பிரிவுகள் பேசியே பூசலிட்ட-பழம்
       பேதமை தனைத்தள்ளி அனைவோரும்
 ஒருதனிக் குடும்பமாய் வாழ்ந்திடுவோம்-நம்முள்
         ஒற்றுமை ஓங்கிடச் செய்திடுவோம்

 தமிழன் திருநாள் பொங்கலென்ருல்-அதில்
         தமிழன் பண்புகள் பொங்குமன்றோ?
 புவியெலாம் சேர்ந்தொரு வீடதிலே-யாரும்
         புறம்பிலை என்றசொல் தமிழன்றோ?

                    55