பக்கம்:தென்னாட்டு காந்தி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

39

சமாதானம் நிலவவேண்டுமென கூடிய கொழும்பு மாநாட்டிலே சீனாவின் துராக்கிரமச் சூதுகள் அம்பலப்படுத்தப்பட்டு விட்டன!

உலக அரங்கிலுள்ள பெரும்பாலான நாடுகள் பாரத நாட்டின் தார்மீகமான நியாய வாதங்களை மதித்துப் போற்றி வருகின்றன!

இந்நிலையிலே, பொம்டிலாவில் மறுபடியும் இந்தியத் தாயின் மணிக்கொடி பறக்கிறது. “காந்திஜிக்கு ஜே! ஜெய்ஹிந்த்!” போன்ற கோஷங்கள் விண்ணதிர முழங்குகின்றன!

அமைதியில் நம்பிக்கை வைத்து, இந்திய-சீன எல்லைத் தகராறைத் தீர்க்க பல தேசத் தலைவர்கள் முனைந்து வருகின்ற நேரத்தில், இந்த பாழாப் போன நயவஞ்சகக் கூட்டத்தினர் மறுபடியும் போர்க்கருவிகளைக் குவிப்பதாகவும் வேவு விமானங்களை அனுப்பி உளவு பார்ப்பதாகவும் செய்திகள் வருகின்றன!

“நாம் அனைவரும் ஒன்றுபட்டு விட்டோம்!” என்று உணர்ந்து, அவ்வுணர்ச்சியில் விம்மிப் புடைத்துச் செயற்பட்டு நம் தாய்த் திருநாட்டை அல்லும் பகலும் காக்க ஆர்த்தெழுந்து விட்டார்கள் பாரத மக்கள். ஆகவே, நமக்கு ஏது இனி அச்சம்? சீனர்களை முழுமையாக விரட்டியடிக்கும்வரை நமக்கு ஏது இனி ஓய்வு?

“பச்சை யூனியைந்த வேற்
படைகள் வந்த போதிலும்
அச்சமில்லை யச்சமில்லை;
அச்சமென்பதில்லையே!
துச்சமாக வெண்ணி நம்மைத்
தூறு செய்த போதினும்,
அச்சமில்லை யச்சமில்லை;
அச்சமென்பதில்லையே!”