பக்கம்:தென்னாட்டு காந்தி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

45

பாகிஸ்தான் போன்ற நாடுகள், நம்முடைய கோவா வெற்றி கண்டு, விரைவிலேயே மனந்தெளிவார்கள் என்பதும் உறுதி.

தமிழ் நாட்டின் தனித்தலைவரான மதிப்புக்குறிய காமராஜ் அவர்கள் குடியரசு தினக் கூட்டத்தில் “வறுமை ஒழியும் வரை காங்கிரசுக்கு ஓய்வே இல்லை!” என்று பேசினார்கள். தேசப்பற்று, தன்னலமின்மை , தியாகம், உழைப்பு, ஏழைகள் பால் கொண்டுள்ள ஈரம் போன்ற குண நலன்களால் எல்லாப் பொதுமக்களின் உள்ளங்களிலும் குடிகொண்டிருக்கிறார் நம் அன்புத் தலைவர் அவர்கள். அவரது தொண்டுகள் தாம் நம் தமிழகத்தின் மதிப்பையும் மாண்பையும் உயர்த்தி வருகின்றன.

இந்தச் சந்தர்ப்பத்தில், மாணவர் சமுதாயத்திற்கும் சில வார்த்தைகள் சொல்லவேண்டியது நம் கடமை, விடுதலை வேள்வியின் வரலாற்றைச் சரித்திரப்புத்தகத்தில் படித்ததின் மூலம் மட்டுமே அவர்களால் அறிய முடியும் படித்தறிந்த செய்திகளை எண்ணிப் பார்த்து, விடுதலைப் (போரின் புனித வேள்வியைப் பக்தியுடன் போற்ற வேண்டும் அவர்கள். இந்தப் பண்பாடு நிரம்பப் பெற்றவர்களாகவே பெரும்பாலான மாணவர்கள் விளங்கி வருகிறார்கள். ஆனால், ஒரு சிலர், தங்கள் சொந்த வாழ்க்கைக்காக கட்சியை உபயோகப்படுத்தி, அதன் விளைவாக, மாணவர் சமுதாயத்தையும் நாட்டுக்கு விரோதமான வழிகளுக்கு வசப்படுத்தி வருகிறார்கள், இந்நிலை மாறவேண்டும். கட்சியின் பேரால் சீமான்களாக வாழும் பொய்த் தலைவர்களின் வேஷங்களை அறிந்து கொண்டு, அவர்களை மாணவர்கள் அம்பலப்படுத்த வேண்டும். அத்துடன், தனி மனிதர்களைவிட, தேசம்தான் பெரிது என்ற உண்மையையும் தெளிவாகப் புரிந்து கொண்டு, நாட்டுப் பணிக்கு உழைக்கப் பழகவேண்டும்!