பக்கம்:தென்னாட்டு காந்தி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

ஆம்; வரலாற்றுச் சிறப்புக் கொண்டவன் தமிழன். தொன்மைப் புகழ் வாய்ந்தது தமிழ்மொழி. தமிழ் என்றால், இனிமை என்று பொருள்: தமிழ் எனில் அழகு: தமிழே அமிழ்தம்! இவ்வகைச் சிறப்புகள் பெற்ற தமிழ், இன்று அரசு மொழியாகவும் போதனா மொழியாகவும் விளங்கும் பெருமை பெற்று வருகிறது.

கொண்ட குறிக்கோளின் வெற்றிக்காக அல்லல் பல அனுபவித்து, அதற்காகப் போராட்டங்கள் பல நிகழ்த்தினோம் நாம். இன்று வெற்றியும் அடைந்திருக்கின்றோம். இந்நிலையில், மீண்டும் புதுப்புதுக் குழப்பங்களும், அர்த்தமற்ற சோதனைகளும் புறப்பட்டு நம்மைத் தொல்லைப் படுத்தி வருவதையும் நாம் நேர்முகமாகக் கண்டு வருகின்றோம்.

அண்மையில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. மாநில முதலமைச்சர்களை வரவழைத்து மாநாடு ஒன்றைக் கூட்டினார் நேருஜி. “இந்தியா ஒரே நாடு ” என்னும் உயர்ந்த கொள்கையில் ஊறி வளர்ந்து வாழ்ந்துவரும் நேருஜி, அக்கொள்கையைச் செயற்படுத்த வேண்டுமென்ற நற்கனவில் அல்லும் பகலும் திளைத்திருக்கின்றார். அதற்காக, அவர் செய்து பார்க்கும் பரீட்சைகள் ஒன்றல்ல, இரண்டல்ல. இந்திய ஐக்கியத்திற்கு மூலாதாரமானது மொழி என்பது அவரது அசைக்க முடியாத நம்பிக்கையாகும். அந்த நம்பிக்கையின் பிரதிபலிப்பாகவே, “இந்திய நாட்டிலுள்ள எல்லா மொழிகளுக்கும் ஒரே லிபி இருக்கவேண்டு மென்றும், அந்த லிபி இந்தி மொழிக்கான ‘தேவநாகரி லிபி’யாகவேதான் இருக்க முடியும்,” என்றும் தில்லி மாநாடு முடிவு கட்டியிருக்கின்றது. அரசியல் சட்டத்தில் அங்கம் பெறும் எல்லா மாநில மொழிகளுக்கும் பொது எழுத்தாக தேவநாகரி லிபி விளங்க வேண்டுமாம்! இம்முடிவு செயற்படுவதென்பது பகற்கனவுக்கு ஒப்பாகும். ஆனால், இது செயல் வடிவம் எடுத்தால் அல்லது, சட்டத்தின் உருவம்