பக்கம்:தென்னாட்டு காந்தி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

சந்தங்களை யமகம், திரிபு, சித்திரம், வித்தாரம் முதலிய கவிமுறை இலக்கணங்களை வைத்துப் பாடவும், எழுத்தியல்பு, சொல்லியல்பு, புணர்ச்சி போன்ற விதிகள் சிறக்கச் செய்யவும் பயன்படும் உயர் தனிச் செம்மொழி இத்தமிழ் மொழி. இதன் இடத்திற்குத் தேவநாகரி எவ்வகையில் பொருந்த முடியும்?

தமிழிலேயே அர்ச்சனைகள் செய்யப்பட வேண்டுமென்ற எண்ணம் மடங்களில் வலுப்பெற்று, அமைச் சரவையின் வலுவையும் சம்பாதிக்கத் தொடங்கியிருகிறது. தமிழே போதனா மொழியாக இயங்கி வெற்றியும் பெற்றிருக்கிறது. இப்படிப்பட்ட கட்டத்தில், இந்தித் திணிப்புக்குரிய வழிவகைகள் அரசுமொழி-பயிற்சி மொழி போன்ற பிரிவுகளுடன் மத்திய அமைப்பில் மறைமுகமாக உருவாகி வருவதை யார்தான் விரும்புவார்கள்?

சென்னை உயர் நிலைப் பள்ளி எஸ். எஸ். எல். ஸி, மாணவர்கள் பலர், இந்தியைப் பாடமாக வைத்ததை எதிர்த்து ஊர்வலம் நடத்திக் கிளர்ச்சி செய்தார்கள். மாணவர்களின் செய்கையைச் சரியென்று நாம் ஏற்கவில்லை. ஆனாலும், அவர்களது செய்கைகளில் நீரோட்டம் காட்டுகின்ற தமிழார்வத்தை நாம் உணர வேண்டாமா?

மொழி வழியில் மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டுமென்ற கொள்கை புயல் வடிவம் கொண்டு விளங்கி வருகின்ற நேரம் இது.

பம்பாய் மகாணப் பிரிவினையைக் கண்டோம்!

‘தனிப் பஞ்சாபி மொழி மாநிலம்’ கோரி, சாகும் வரை உண்ணா நோன்பு இருக்கத் திட்டமிட்டு, பொற் கோயிலில் விரதமிருந்து வரும் அகாலி தளத் தலைவர் மாஸ்டர் , தாராசிங் அவர்களின் லட்சியத்தை மத்திய அரசு ‘வெறி’ யென்று ஒதுக்கிவிட முடியாது!