பக்கம்:தென்னாட்டு காந்தி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

கவி தாகூரின் கால்கள் இந்திய மண்ணில் ஊன்றியிருந்தன; அவரது கவிமனம் இந்திய ஞானத்தில் ஊறித் திளைத்திருந்தது. அவர் இந்திய இலக்கியத் தாயின் தவப்புதல்வர்.

பாரதப் பண்பாடு தனி மகத்துவம் பூண்டது. அதுபோலவே, தாகூரின் கதைகள் ஈட்டிய புகழ்பெரிது. ‘ஸுபா’, ‘தபால் காரன்’ ‘உடற்கூடு’ போன்ற அற்புதமான சிறுகதைப் படைப்புக்களைப் புகழ்வதா? ‘கவிழ்ந்த படகு’, ‘வீடும் வெளியும்’, ‘இரு சகோதரிகள்’ முதலான நவீனங்களைப் போற்றுவதா? சிருஷ்டித் தத்துவத்தின் காவிய விளக்கமாகவும் சிருஷ்டியின் புதிரைச் சொல்லும் கதைக் கோவையாகவும் பொலுவுறும் ‘தங்கப் படகு’ போன்ற கதைச் சித்திரங்களின் வண்ணங்களை வாழ்த்த வாத்தைகள் ஏது? அவர் பாடிய ‘தேசிய கீதம்’ காலத்தை வெல்ல வல்லது !

தாகூர் மனித மகாகவி, ஏனெனில், கவிக்குரிய சிறப்பியல்புகளுக்கெல்லாம் மகுடமாகத் திகழ்ந்த மனிதாபிமானம், அவரது இதயத்தில் வற்றாமல் ஊறிக் கொண்டிருந்தது. தொல்லைப்படும் பிறந்த நாட்டுக்காக தொல்லைப்பட்டவர் அவர். கவியின் மனத்தூய்மை நிரம்பிவழிந்த அந்தத் தெய்விகப் பண்புச் சுடர் அவரை உலக மேடையில் கொண்டுபோய் நிறுத்தியது. இன்று நாம் தாகூரின் பெயரைக் காட்டிப் பெருமை அடைகின்றோம். குருதேவரின் நூற்றாண்டு விழா இப்பொழுது உலக மெங்கும் நடைபெறுகிறது. உலக மேதையின் நினைவு நாளிலே, அன்னாரது விலைமதிக்க முடியாத திறனைப் போற்றி, அவரது கவி இதயத்துக்கு அஞ்சலி செலுத்துகிறோம்.