உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் பாலசுப்பிரமணியம் புகழாரம் இந்தப் புதினத்தின் தொடக்கம் கத்தப்பட்டுக் கிராமத்தில் இன்றும் காணக்கூடிய வாளுக்குவேலியின் வர்ணனையாக இருக்கிறது. இதன் முடிவு அவன் சாவில் கூடத் தான் பெரிதும் நேசித்த தன் தங்கையின் வாழ்வை மீண்டும் தருகிற வகையில் தாலியைக் கையில் தாங்கியிருக்கிற நிலையில் கதை முடிகிறது. இது ஒரு பெரும் சிறப்பு. மற்றொரு சிறப்பு:மூன்று சொற்களால் இந்தப் புதினத்தை நான் பாராட்டுவேன். ஒன்று உழைப்பு: இரண்டாவது உணர்வு; மூன்றாவது உயர்வு. இந்த புதினத்தில் உழைப்பு என்பதை எடுத்துக் கொண்டால் டாக்டர் பட்டத்திற்கு எங்களுடைய பல்கலைக் கழக மாணவன் எந்த அளவிற்குக் குறிப்புகளைத் திரட்டுவானோ, அதற்குச் சற்றும் குறைவில்லாமல் உழைப்புப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை ஒரு ஆராய்ச்சியாளனை மதிப்பிடுகிறவன் என்ற முறையில் காணமுடிகிறது. உணர்வு என்கிறபோது இந்தநூல் முழுவதிலும் தமிழ் உணர்வு, தமிழ் இன உணர்வு, தமிழ் நாட்டுணர்வு ஆகியவைகளை நாம் காணமுடிகிறது. மூன்றாவது உயர்வு: இதனைப் படிக்கின்ற காரணத்தால் இந்த இனம் எப்படி உயர முடியும் என்பதற்கு. பக்குவமாக கலைஞர் அவர்கள் இனத்தின் உயர்வைக் காட்டியிருக்கிறார். எதிர்காலத் தமிழகம் எப்படி எப்படி அமைய வேண்டும் என்ற அவர்களின் கனவை இதில் குறிப்பாகப் புலப் படுத்தியிருக்கிறார்.