பக்கம்:தென்மொழி, சுவடி1 ஓலை10 நவம்பர் 1963.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4 தென்மொழி



சாதி, சமயங்கள் சாற்றுகின்ற பொய்க்கூற்றை
ஓதி உணர்த்திப் பருத்தறிவை ஊட்டுதற்குத்
தன்மதிப்பை நாட்டுந் தனிக்கட்சி கண்டவர்க்கும்,
என்மதிப்புப் பெற்றாலும் ஏழைத் தொழிலாளர்
தாம்மதிப்புக் கொள்நாளே தாமயரும் நாளென்றே,
ஏமப் பொதுவுடைமை வேண்டிடுவோம் என்பார்க்கும்
முற்றத் தெளிந்து முடித்த துணிபுடன்யாம்
உற்ற இறுதிமொழி ஒன்றை உரைத்திடுவோம்!
கற்றுத் தெளிந்தவரே, காணுங் கருத்தறிந்து
சற்றும் பொருத்தமில்லை என்னின் சரிப்படுத்திக்
கூறுவீர் ஆயினுங்கள் கூற்றை உடனேற்று
மாறுவோம்; உங்கள் அருளை மதித்திடுவோம்!
பேரளவில் அல்லால் பெருங்கொள்கை என்றமைந்த
வேரளவில் உங்கட்குள் வேற்றுமைகள் இல்லையென்போம்.
ஒன்றிரண்டு கூறிடினும் உங்கள் வழிமுறையில்-
சென்றுகொண் டுள்ள திசைவழியில் தாமிருக்கும்.
'ஊர்திருத்த வேண்டும்; தமிழர் உயவேண்டும்;
ஏர்திருத்த வேண்டும்; இலரிலையா கல்வேண்டும்;
கூட்டுறவே வேண்டும்; குலமழிய வேண்டுமெனும்
நாட்டுநலம் பேணுகின்ற நல்லபல நோக்கமாஞ்
சீர்திருத்தக் கூற்றில் சிறுதிருத்தங் கூட,இல்லை!
பேர்திருத்திக் கொண்டால் பிறக்கும் பெருங்கட்சி!
செந்தமிழ்த்தாய்க் கென்றும் சிறுமை நினையீர்கள்.
சொந்தத் தமிழ்நாட்டார் சோற்றுக்குத் திண்டாட
வந்தார் வழிப்பறிக்க, வாய்மூட மாட்டீர்கள்!
நொந்தார் தமிழரெனின் நோகுமுங்கள் உள்ளங்கள்!
மாறு திருக்குமுகங்கள் போக்கால், மதியாமல்,
வேறார் படையெடுப்பின் வேற்றுமைகள் தாமறப்பீர்.
உங்கள் உடலில் உயிரில் தமிழ்க்குருதி
பொங்கி வழியும் புலனறிவோம்! நற்றலைவீர்!
செந்தமிழைப் பேசும் திருவாயும், நேர்நெஞ்சும்
எத்தமிழர் சொத்தென்று யாமறிவோம்; ஆனாலும்
இற்றைக் கிருக்கும் இழிநிலையை என்னிடிலோ
வெற்றுப் பெருமைகளாய் நம்பெருமை வீழ்ந்தொழியும்!
கற்றார் உளக்கொதிப்பால் சொல்லைக் கனலாக்கிச்
சற்றே விரிக்கின்றோம்; சால்பின் செவிமடுப்பீர்;
உற்றுப் பார்த்தாலும் உள்ளம் உவப்பதுபோல்,