பக்கம்:தென்மொழி, சுவடி1 ஓலை10 நவம்பர் 1963.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தென்மொழி 5



நெற்றுப் பயிராய் நினைவு முதிர்வதுபோல்
செந்தமிழ் நாட்டில் செழுமை துளியுமில்லை;
எந்தமிழர் முன்னேற்றம் என்பதெல்லாம் வெற்றுரையே!
நெய்யில் பொறித்த நிலாப்போலும் அப்பளத்தைக்
கைதாழத் தூக்கிக் கனமென்று சொல்வதுபோல்
மெய்யாய் உரைக்கின்ற மேலான பொய்யுரையே!
'உய்யாமல் இல்லையா' என்பீரேல், உண்டுண்டு;
பொய்யில், புரட்டிவிழி 'சாதி'ப் பொருமல்களில்,
வெய்யக் கொடுமைகளில் கொள்ளை விளைவுண்டு!
மெய்யூட்டம் செய்துகொள, மேனி பளபளக்கக்
கையூட்டு வாங்கும் கணக்கிலே முன்னேற்றம்!
பொல்லார் பெரும்பணத்தால் போராடி வெல்வதல்லால்,
இல்லார்க்கிங் கில்லையறம் என்பதிலே முன்னேற்றம்!
வாரிக் கொடுத்த வரிப்பணத்தால் வாங்கிவைத்த
சார்கருவி, ஊசி, குளிகை, மருந்துகளை
ஏழைகட்குத் தாராமல் இல்லம் எடுத்தேகிக்
கூழைப் பொருள்பறித்துக் கொள்வதிலே முன்னேற்றம்!
பெண்டிரொடு பிள்ளை பிரிந்து வகையின்றி
உண்டிக் கடையில் உடலை அடகுவைக்கும்
போக்கில்லார் தம்வயிற்றுப் போக்கறிந்தும் சுண்ணச்சோ
றாக்கிப் படைக்கும் அற(!)வழியில் முன்னேற்றம்!
பள்ளியிலே போடும் பகலுணவுக் காம்பொருளைக்
கொள்ளையிட்டுப் போகின்ற கூட்டுறவில் முன்னேற்றம்!
காசைப் பறித்திடவே, கண்டபடி பாட்டெழுதி
ஓசைக் கருவிகளின் ஓலங்கள் தம்மிடையில்,
முத்துப்பல் காட்டி, முகங்காட்டி, மெய்காட்டித்
தித்தித்தோம் தித்தித்தோம் என்று தெருக்கூத்தில்
ஆடுதல்போல் பெண்களையும் ஆண்களையும் ஆடவைக்கும்
நாடகத்தில், வண்ணத் திரைப்படத்தில் முன்னேற்றம்!
மேவுகின்ற கல்விப் பெருந்துறையில், மேலாண்மைக்
காவல் துறையில்,தீங் கள்ளமது விற்பனையில்,
மெய்யாய்க் கொழுப்புருக்கி வெண்ணெய் துளிகலந்து
நெய்யென்று கூறிவிற்கும் நேர்மை(!)சேர் வாணிகத்தில்,
நோயின் பெருக்கத்தில், போலி நடப்புகளில்
கோயில் மடங்களெனும் நற்பெயரால் கொள்ளையிடும்
நல்லதிருக் கூட்டத்தில், நாளும் நடக்கின்ற
வல்லபெருஞ் சொற்பொழிவில், மாய மயக்குகள்சேர்