பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தெய்வ அரசு கண்ட இளவரசன்

24

தாராவை வாங்கிச் செல்ல வந்த பையன் ஏமாற்றத்தோடு திரும்பினான். தேவதத்தனிடம் போய் நடந்த நிகழ்ச்சிகளைக் கூறினான்.

சித்தார்த்தன் தாராவைக் கொடுக்க முடியாதென்று சொன்னது கேட்டு தேவதத்தன் சீறினான்; ஆத்திரப்பட்டான். அவனும் அரச குலத்தைச் சேர்ந்தவன் தான். சித்தார்த்தனுக்கு உறவினன்தான். ஆனால், இளவரசனை அதுவும் சுத்தோதனருடைய செல்லக் குழந்தையை எதிர்த்து அவன் என்ன செய்துவிட முடியும்.

சித்தார்த்தன் அந்தத் தாரா குணமடையும்வரை வைத்திருந்து பிறகு அதைச் சுதந்திரமாகப் பறந்து செல்லும்படி விட்டு விட்டான்

இந்த நிகழ்ச்சியைச் சிறுவர்கள் சொல்லக் கேட்டது முதல் சுத்தோதனருக்கு இருப்புக் கொள்ளவில்லை. இவ்வளவு கருணை ஓர் இளவரசனுக்கு இருக்குமா? இருக்க முடியுமா? இருக்கலாமா? ஒரு பண்பட்ட ஞானிக்குத்தான் இந்தக் குணம் ஏற்றது. அப்படியானால் சித்தார்த்தன் ஞானியாகத்தான் திகழ்வானா? அரண்மனை வாழ்வைத் துறந்துவிடுவானா?