பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தெய்வ அரசு கண்ட இளவரசன்

66

முகம் சுளித்ததை நாங்கள் மிக அருகில் நின்றே கண்டோம். சாப்பிடாமல் அதைத் தூக்கி எறிந்து விடுவான் என்றே எண்ணினோம். ஆனால், பாவம் ! பசி அதிகம் போலிருக்கிறது. கண்ணை மூடிக்கொண்டு கவளம் கவளமாக அள்ளிப் போட்டு அவ்வளவு சோற்றையும் விழுங்கிவிட்டான். உண்டு முடிந்தபின் நிழலிலே சாய்ந்து படுத்து உறங்கத் தொடங்கினான். நாங்கள் திரும்பி வந்தோம்” என்றார்கள்.

“பாவம்! அவன் ஓர் அரசனாக இருக்க வேண்டும் அல்லது செல்வச் சீமானாக இருக்க வேண்டும். என்ன காரணத்தினாலோ நாட்டை விட்டு விரட்டியடிக்கப்பட்டவனாக இருக்க வேண்டும். நாளை நானே அவனைப் போய்ப் பார்க்கிறேன்" என்று சொன்னான் அவன்.

சொன்னபடி அவன் மறுநாள் சித்தார்த்தன் தங்கியிருந்த மலையடிவாரத்திற்குச் சென்றான். சித்தார்த்தனைக் கண்டவுடனே. அந்த மகத மன்னனுக்கு அவன்மேல் ஒரு மதிப்பு ஏற்பட்டது. தொலைவிலிருந்து அவன் செயல் நடை முறைகளைக் கவனித்தபோதே அவனுடைய உயர்குடிப் பிறப்பின் தன்மை புலப்பட்டது.