பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை இன்று நூல் வடிவில் வெளி வரும் இந்த நாடகங்கள் அனைத்தும் 'வானொலியில் நடிப்பதற்காக எழுதப் பெற்றவை. வானொலியில் நடிப்பதற்கு எழுதப்பெறும் நாடகங்கள் ஒருவகையில் அமைந்திருக்க வேண்டிய இன்றியமையாமை உண்டு நாடகத்தைக் கேட்பவர் காது ஒன்றின் துணைகொண்டே நாடகத்தை அனுபவிக்கிறார். ஏனைய நாடகங்களில், கேட்பவர் காதுடன் கண்ணையும் பயன்படுத்துகின்றனர். எனவே, ஒலி செய்யாத ஒரு பகுதி வேலையைக் கண்கள் காட்சியால் பெற்று அனுபவித்து விடுகின்றன. மேலும், நடிகரின் உடை, முகபாவம், விளக்கின் உதவி முதலிய புறச் சாதனங்களும் நாடகம் சிறக்க உதவுகின்றன. அரங்கில் நடிக்கப்பெறும் நாடகங்களில் உரையாடல் சற்று நீண்டிருப்பினும் நாடகம் பார்ப்பவருக்கு அலுப்புத் தட்டுவதில்லை. ஆனால், காதின் உதவியால் மட்டும் அனுபவிக்கப்பெறுகிற வானொலி நாடகம் எழுதுபவன், சில கட்டுப்பாடுகளைப் பெறுகிறான். மேலே கூறிய புறச் சாதனங்களுள் ஒன்றும் அவனுக்கு இல்லை. தான் பயன்படுத்தும் சொற்களின் ஒலி வேறு பாட்டால்மட்டும் அவன் உணர்ச்சி வேறுபாடுகளைக் காட்ட வேண்டிய இக்கட்டான நிலை ஏற்படுகிறது. எனவே, வானொலிக்கு ஏற்ற நாடகம் ஒன்று, நடிப்புக்கும் ஏற்றதாய் இருக்குமென்று சொல்வதற்கில்லை. ஆதலின், இந் நாடகங்கள் நடிக்கப்படுவதில் சில குறைபாடுகள் தோன்றத்தான் செய்யும் என்பதை முன்கூட்டி அறிவிப்பது ஆசிரியன் கடமையாகிறது.