பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

6 தேசியத் தலைவர் காமராஜர் சாதாரணக் காங்கிரஸ் தொண்டராக அவர், அவ்வியக்கத்திலே சேர்ந்து, விடுதலை வீரராக, காராகிரகக் காளையாக, ஏழை பங்காளராக, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக, தமிழகத்தின் முதலமைச்சராக, தனது கடும் உழைப்பால் படிப் படியாக அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கே தலைவராக முன்னேறினார் என்றால், வரற்கரிய வான்புகழ் வலிய வந்தடைந்ததை எவர்தான் வியந்து பாராட்டார்? இத்தகைய செயற்கரிய செயல்கட்கு இலக்கணமாய் இலங்கிய தலைவர் காமராஜ் என்ற செயல் வீரர், ஒரிசா மாநிலத்திலே நடைபெறப் போகும் புவனேஸ்வரம் மாநாட்டிற்குப் புறப்படலானார் - அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பெருந்தலைவர் என்ற பெருமையோடு! 'வரலாறு ஒவ்வொன்றும் இமயமலைச் சாரல்களிலே இருந்துதான் ஆரம்பமாகிறது' என்ற வரலாற்றாசிரியர்களின் சிந்தனை வரம்பை மாற்றி அமைத்தவர் தலைவர் காமராஜ்! மேதினியின் முதல் மண் தோன்றிய நாவலந்தீவு எனப்படும் இலெமூரியக் கண்டத்துக் கடல் விழுங்கியக் கபாடபுரம், கவின்புகார், தென் மதுரை மண்ணின் எஞ்சிய சிறு பகுதியான கன்னியாகுமரி முனையிலே இருந்தும் வரலாறு துவங்கும் என்ற காலக் கட்டளை, காமராஜ் அவர்கள் புவனேஸ்வரம் புறப்பட்ட நிகழ்ச்சியால் அமைந்து விட்டது. "தமிழன் என்று சொல்லடா-தலை நிமிர்ந்து நில்லடா" என்று, தமிழக முதல் அரசவைக் கவிஞராக இருந்து மறைந்த நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை அவர்களின் தமிழ் உணர்விற்கு, காமராஜ் என்ற கர்மயோகியின் வரலாறு ஒர் இலக்கியமாக அமைந்தது!