பக்கம்:தேன்மழை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மயில்


அகவும் மயிலே! அகவும் மயிலே!

கால மறிந்து கருமுகில் மழைதர

இளமணல் பரவிய எழில்மிகு காடெலாம்

முல்லை அரும்புகள் மெல்ல நகைக்கச்

சிவந்த பவளம் சிதறினாற் போன்று

தம்பலப் பூச்சிகள் தரைமீது தவழ

கைவிரல் போன்ற காந்தள் அரும்பெலாம்

நிமிர்ந்துநின் றெரியும் நெருப்பென மலரக்

கருநிற வண்டுகள் காந்தாரம் பாடிட

ஆடிக் களிக்கும் அழகிய மயிலே!





உன்விழி நீலம்; உன்தோகை நீளம்;

உன்னுடல் மரகதம், உச்சிக் கொண்டையோ

கண்ணைக் கவர்ந்திடும் காயா மலர்கள்!




ஆடும் பறவைநின் அடிகள் இரண்டும்

ஈர நொச்சியின் இலைகளே யாகும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/26&oldid=495476" இலிருந்து மீள்விக்கப்பட்டது